சவூதி அரேபியா – எகிப்தை இணைக்கும் வகையில் செங்கடலில் பாலம்

0
153

சவூதி அரேபியாவையும் எகிப்தையும் இணைக்கும் வகையில் செங்கடலின் குறுக்கே பாலம் கட்டப்படும் என சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அறிவித்திருக்கிறார்.

இந்தப் பாலத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் பெருமளவு மேம்படுமென ஒரு அறிக்கையில் அரசர் தெரிவித்திருக்கிறார்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு ஐந்து நாள் அரசு முறை பயணமாக வந்திருக்கும் அரசர், விஜயத்தின் இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அந்தப் பாலத்திற்கு சவூதி அரசரின் பெயர் வைக்கப்படும் என எகிப்தின் அதிபர் அப்துல் ஃபடா அல் – சிசி கூறியிருக்கிறார். அதிபர் சிசி சவூதி அரசுக்கு மிக நெருக்கமானவர்.

“இந்த வரலாற்று நடவடிக்கையின் மூலம் ஆஃப்ரிக்கா – ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களும் இணைக்கப்படும். இரு கண்டங்களுக்கும் இடையிலான வர்த்தகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்படும்” என அரசர் சல்மான் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில், செங்கடலின் மீது பாலம் அமைக்கும் திட்டம் இதற்கு முன்பாக பல முறை முன்வைக்கப்பட்டும், உரிய வடிவம் பெறவில்லை.

இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க மூன்று முதல் நான்கு பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய திட்டப்படி எவ்வளவு செலவாகும் என்ற தகவல் இல்லை.

எகிப்தின் அதிபராக 2013ல் சிசி பதவியேற்ற பிறகு சவூதி அரேபியாவும் பிற வளைகுடா நாடுகளும் கோடிக்கணக்கான டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளன.

LEAVE A REPLY