மியான்மரில் ஆட்சிமாற்றம் எதிரொலி: நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில் இருந்து விடுதலை

0
130

மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. சூகி இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் ஆங் சான் சூகி, அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அரசின் பிரதான ஆலோசகராக ஆங் சான் சூகி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை படிப்படியாக விடுதலை செய்ய ஆங் சான் சூ கி முடிவு செய்தார். இந்த முடிவின்படி, முதல்கட்டமாக கடந்த ஆண்டு மாஎச் மாதம் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, வடக்கு யாங்கூனில் உள்ள தாராவாடி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 69 மாணவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இரண்டாம் கட்டமாக சுமார் நூறு அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு அதிபர் ஹிதின் கியாவ் உத்தரவிட்டுள்ளதாகவும், அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் ஆங் சான் சூ கியின் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஸா ட்டே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY