குழந்தை ஏன் அழுகிறது?

0
1326

பொதுவாக பிறந்த ஆரோக்கியமான குழந்தைகள் கூட ஒரு நாளைக்கு 1 முதல் 3 மணி நேரம் அழுவது இயற்கை என்கின்றனர் மருத்துவர்கள்.

பெற்றோருக்கு குழந்தை எதற்காக அழுகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கும். பசியா, தூக்கமா, தாகமா, வலியா என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்வோம். குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

உணவு வேண்டும்: குழந்தை அழுவதற்கான காரணங்களில் பசியும் ஒன்று. குழந்தையின் வயிறு சிறியதாகையால் அதனால் அதிகம் சாப்பிட முடியாது. குழந்தை பசியோடு இருக்கக் கூடும், ஆகவே அழுதால் அதற்கு பால் புகட்டுங்கள்.

குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அசௌகரியம்: சில குழந்தைகள் தங்களது நாப்கின்கள் மாற்றப்படுவதைப் பற்றி அதிகம் கவலைப்படாது. சில குழந்தைகள் தங்கள் தோல் லேசாக நமைச்சல் எடுத்தாலே அழத் தொடங்கிவிடும்.

`டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.

வெப்பமா/ குளிரா – குழந்தைகளுக்கு அதிகம் சூடாகவோ அல்லது சில்லென்றோ இருக்கிறதா என்பதை அதன் வயிற்றை தொட்டு சோதித்துப் பாருங்கள் (காலையோ கையையோ தொட்டுப் பார்க்க வேண்டாம். அது எப்போதும் சற்று சில்லென்றே இருக்கும்). குழந்தை சூடாக இருந்தால் போர்வையை விலக்கி விடுங்கள். சில்லென்றிருந்தால் போர்வையை போர்த்துங்கள். குழந்தை இருக்கும் அறையின் வெப்பநிலையை 64 டிகிரி பாரன்ஹிட் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆடை ஆபரணங்கள் – அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். பருத்தி ஆடைகள், லேசான ஆடைளை தேர்ந்தெடுக்கலாம்.

ஓய்வு தேவை – பச்சிளங் குழந்தைகளால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது. ஆகவே, ”இனி என்னால் தாங்க முடியாது” என்று கூறுவதாகவும் அதன் அழுகை இருக்கலாம். அமைதியான இடத்திற்கு குழந்தையை எடுத்துச் செல்லுங்கள், சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தை தூங்க ஆரம்பிக்கும்.

உடம்பு சரியில்லை – சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.

இந்த மாதிரி நேரங்களில் குழந்தை பால் குடிக்காது, தொடர்ந்து அழுவது, வீறிட்டு அழுவது, உடலை முறுக்கி அழுவது என்று அழுகைச் சத்தம் வேறுபடும். குழந்தை அழும் போது மூச்சுத் திணறல் இருந்தாலோ, வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் இருந்தாலோ உடனே டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

ஏதோ தேவை…ஆனால் சொல்லத் தெரியவில்லை

பல பச்சிளங் குழந்தைகள் வயிற்று வலியின் காரணமாக தொடர்ந்து அழக்கூடும். இதை சமாளிப்பது கடினம். உடனே தீர்க்க எந்த மாயாஜாலமும் இல்லை. சில அபூர்வமான சமயங்களில் இந்த வயிற்று வலி மூன்று மாதங்களுக்குக் கூட நீடிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பது நல்லது.

கவனமாக தூக்குங்கள் -ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யாமல் உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.

பூச்சி கடித்தால் – எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும். தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். புட்டிப்பாலில் சர்க்கரை கலந்து குழந்தைக்குக் கொடுக்கும்போது, அதில் சில சொட்டுகள் வாய் ஓரத்தில் ஒழுகியிருக்கும்.

சர்க்கரை வாசனைக்கு வரும் எறும்பு கடித்துவிடும். அப்போது குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுச் சிவந்த தடிப்புகள் ஏற்படலாம். தொடர்ந்து அழும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது.

ஆனால் பெற்றோர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகலாம். குழந்தையை அமைதிப்படுத்த உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டீர்களேயானால் அதற்கு மேல் நீங்கள் செய்யக் கூடியது இதுதான். குழந்தை தனது தேவையை உங்களுக்கு தெரிவிக்க ஒவ்வொரு நாளும் புதிய வழிகளை கற்கிறது என்பதையும், இந்த அழுகைக் கட்டம் ஒரு நாள் நிற்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

LEAVE A REPLY