ஆறாவது மாதமாக நீடிக்கப்படுகிறது பிள்ளையானின் விளக்கமறியல்

0
81

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தமிழ் அரசியல்வாதியொருவரின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களில் ஒருவரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான விளக்கமறியல் புதன்கிழமை தொடர்ந்தும் ஆறாவது மாதமாக நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக இவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கொலை தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரும் புதன்கிழமை 06.04.2016 மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 6வது மாதமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வை சேர்ந்த எம். கலீல் ஆகியோரே இக் கொலை தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களாவர்.

அதேநேரம் சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணையும் ஏற்கனெவே 28ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்தில் இந்த கொலை இடம் பெற்றிருந்த போதிலும் விசாரணைகளில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

கடந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களில் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதாகி தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அவரது ஆலோசகர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திகாந்தன் 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவாகி 2012 வரை அந்த பதவியை வகித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY