உலமாக்கள் எல்லாத் தரப்பினரையும் நல்வழிப்படுத்தும் பொறுப்பில் நீங்கள் வழிகாட்டிகளாக செயற்பட வேண்டும்: அமீர் அலி

0
204

(வாழைச்சேனை நிருபர்)

உலமாக்கள் நமது சமூகத்தின் வழிகாட்டிகள். அந்தப்பொறுப்பினை இறைவன் உங்களுக்கு தந்துள்ளான், சமூகத்தில் உள்ள வியாபாரிகளை, ஆசிரியர்களை, விவசாயிகளை, அரசியல் வாதிகளை என்று எல்லாத்தரப்பினரையும் நல்வழிப்படுத்தும் பொறுப்பில் நீங்கள் வழிகாட்டிகளாக செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கூறினார்கள்.

பாலமுனை ஜும்ஆ பள்ளிவாயலில் அல் மத்ரஸதுல் புர்கானியா மாணவர்கள்,அதன் ஆசிரியர்கள்,பள்ளி பரிபாலன சபை அங்கத்தவர்கள் ஊர்ப்பிரமுகர்கள் ஆகியோர்களுடனான சந்திப்பின் போது கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்கள்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

வினைத்திறன் மிக்க உலமாக்களின் தேவை இப்போது உணரப்பட்டு இருக்கிறது. அரசியல் வாதிகளை வழிநடத்தும் திடம் உங்களிடம் இருக்க வேண்டும். மார்க்கக்கல்வியையும் உலகக்கல்வியினையும் நன்றாக கற்க வேண்டும். நல்லொழுக்கத்தின் வாசல்களான நீங்கள் நல்லொழுக்கமுடைய சமூகத்தினை உருவாக்க உறுதியாக இயங்க வேண்டும்.

நமது சமூகத்தின் எல்லா மட்டங்களுடனான தொடர்புகளும் உங்களுக்கு இருக்கிறது. அதனை சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

இந்த சமூகத்தின் நன்மையை கருத்தில் கொண்டே நாம் கடந்த கால ஆட்சியை விட்டு வெளியேறினோம், இதில் எங்களது சுயநலம் எதுவும் இருக்கவில்லை, இனவாதம் பேசித்திரிந்த ஒரு குழுவினரை அந்த ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எமது சமூகத்தின் பர்தாக்களை பாதுகாக்க, தொப்பிகளை பாதுகாக்க, பள்ளிகளைப் பாதுகாக்க, நமது மத அனுஷ்டானங்களுக்கு எதிரான செயற்பாட்டினை தடுக்க ஆட்சிமாற்றம் ஒன்றின் அவசியம் தேவைப்பட்டது.

அந்தத் தேவையை நமது பிம்பர்களும்,பிரசங்க மேடைகளும் மிகவும் அழுத்தமாக முன்வைத்தன, மக்கள் முடிவெடுத்தார்கள்,உலமாக்கள் எங்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்,புத்தி ஜீவிகளிடம் கலந்தாலோசித்தோம் இறுதியில் இறைவனை வணங்கிவிட்டு இறுதித்தீர்மானத்துக்கு வந்தோம். அந்தத்தீர்மானம் இலங்கையின் அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்டது. அந்தத்தீர்மானம் நாங்கள் எடுப்பதற்கு மிக முக்கியமாக எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியவர்கள் உலமாக்கள். இன்று அச்சமற்ற,இனவாதமற்ற,மதவாதமற்ற ஒரு நல்லாட்சியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களாக வாழ்கிறோம்.

மாற்றம் ஒன்று தேவை என்று சமூகம் விரும்பிய போது அந்த மாற்றத்தினை மிகுந்த தைரியத்துடன் கொண்டுவர உந்து சக்தியாக இருந்தவர்கள் நாங்கள், அந்த விடயத்தில் எமது தலைவர் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுத்தார். ஆனால் இன்னொரு தலைவரோ மனசாட்சியின் படி வாக்களியுங்கள் என்று ஒதுங்கிக் கொண்டார்.ஒரு சமூகத்தினை வழி நடத்தும் இலட்சனம் இதுவா? எனவே உலமாக்களே நம்பிக்கையோடு இருங்கள் நாங்கள் சமூகத்தினை நோக்காக கொண்டு மாத்திரமே அரசியல் செய்பவர்கள். எங்களது இந்த இலட்சியப்பாதையில் நாங்கள் வழி தவருமிடத்து எங்களை வழி நடத்த வேண்டும் எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் பாலமுனையைச்சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஜனாப் கபூர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் , கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவ்வி,மற்றும் ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது இப்பள்ளிவாயலின் புனரமைப்பு பணிக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீனால் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY