சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா ஆவணக்கசிவு; உலக தலைவர்கள் பலர் சிக்கலில்

0
276

உலகின் சில செல்வந்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும், எவ்வாறு பணச் சலவையிலும் நிதித்தடைகளை தவிர்ப்பதிலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை காடடுகின்ற மில்லியன் கணக்கான ஆவணங்கள் கசிந்து சர்வதேச அளவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கருப்பு பணத்தை சுவிஸ் (சுவிட்சர்லாந்து) நாட்டு வங்கிகளில் பதுக்குவதுதான் இதுவரை உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. அந்நாட்டு வங்கிகளில் வைத்துள்ள வெளிநாட்டு பிரமுகர்களின் வங்கிக் கணக்குகள் ராணுவ இரகசியத்தை விட பாதுகாப்பானது என்று கூறப்படுவதால் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் ஏராளம்.

இதேபோல் மத்திய அமெரிக்க நாடான பனாமா, உலக நாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துகளை வாங்கிக் குவிக்கும், பணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக திகழும் இரகசியம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.

மொஸ்ஸக் ஃபொன்சேக (Mossack Fonseca) என்ற வெளிநாட்டு நிதி நிறுவனத்திலிருந்து 11மில்லியன் ஆவணங்கள், விக்கிலீக்ஸ் கசிவை விட மிகப்பெரிய தகவல் கசிவாக, கசிந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகளின் முன்னாள் மற்றும் தற்கால அரச தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள், சட்டவிரோதமாக தாங்கள் ஈட்டிய பணத்தின் விபரங்கள் இந்த ஆவணங்களில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கசிந்த பனமா ஆவணங்களில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி, பாகிஸ்தான் பிரதமர், ரஷிய அதிபர் புதின் உதவியாளர்கள், பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் சிரியாவின் ஜனாதிபதி பசர் அல் அசாட் மேலும் இந்தியாவின் நடிர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களின் பெயர்களும் இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் ஆகியோரும் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பனாமா அதிபர் ஜூவன் கார்லோஸ் வெரெலா இதுபற்றி கூறுகையில், “வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் எங்களுடன் சில நாடுகளால் போட்டி போட முடியவில்லை. அவைதான் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளன. எனினும் எங்கள் நாட்டில், மறைமுகமான எந்த ஒப்பந்தங்களுக்கும் இடமில்லை. அதை நாங்கள் அனுமதிப்பதும் கிடையாது. இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

#Adaderana

LEAVE A REPLY