பரஸ்பரம் அன்பு பாராட்டுகின்ற ஒரு சமூகத்தில் மாத்திரமே ஐக்கியம், சமாதான சகவாழ்வு ஏற்பட முடியும்

0
520

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

அன்பு பாராட்டாத தனி நபர்களாயினும், குடும்பங்களாயினும்,சமூகங்களாயினும் பரஸ்பரம் அன்பு பாராட்டா விடின் அங்கு விட்டுக் கொடுப்பும் தாராளத் தன்மையும்,மன்னித்தலும் இருக்க மாட்டாது.

மாறாக, அறிவு, செல்வம், அடைவுகள் குறித்த இறுமாப்பும், அகங்காரமும்,போட்டி பொறாமையும், சுய நலமும் மேலோங்கி நிற்கும். அடுத்தவரை நாம் அங்கீகரிக்கவும் கூடாது, அவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைத்து விடவும் கூடாது என்பதே பிரதான நிகழ்ச்சி நிரலாக இருக்கும்.

அங்கு குறைகாணல் , பிழைபிடித்து பிரபல்யம் தேடல் மேலோங்கி நிறைகாணும் பண்புகள் அருகிப் போய் விடுகின்றன, நேரிடையான அணுகுமுறைகள் அற்றுப் போய் எதிலும் எங்கும் எதிர்மறையான அணுகுமுறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால் தான் விசுவாசிகள் தங்களுக்கிடையில் பரஸ்பரம் அன்பு பாராட்டக் கூடிய சகோதர வாஞ்சையுடைய அடியார்களாக இருத்தல் வலியுறுத்தப் பட்டுள்ளது.

“முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், நிராகரிப்போர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்”
(ஸுரத்துல் பாத்ஹு 48:29)

இறுதி இறைதூதர் பற்றிக் கூறும் பொழுது எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்தின் மீது கருணையின் வடிவமாகவே அன்றி நாம் உம்மை அனுப்பவில்லை என்று கூறுகின்றான்.

“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.”
(ஸுரத் ஆல் இம்ரான் 3:159)

அன்பிலா அறிவும் அறிவும் மோதுகின்ற பொழுது அங்கு ஆணவமும் செறுக்கும் மேலோங்கி நிற்கின்றன, ஆனால் அன்பின் முன் அறிவுகூட அடங்கிச் செல்கின்றது.
அதே போன்று தான் அன்பிலா உழைப்பும் செல்வமும் அறநெறி தவறுகின்றன அங்கு போட்டியும் பொறாமையும் தலை தூக்கி விடுகின்றன, அன்பிற்கும் பாசத்திற்கும் முன்னாள் கணக்கு வழக்குகள் கூட பிழைத்துப் போகின்றன.

அன்பு, கருணை, பற்று பாசம் என்பவை தனி மனித, குடும்ப, அயலவர், சமூக வாழ்வில் ஊக்குவிக்கப் படுவதற்கான அனைத்து ஆன்மீக பண்பாட்டு விழுமியங்களை இனிய இஸ்லாம் போதிக்கின்றது.

தராஹும், தஆவுன், தாகாபுஃள், தாழாமுன் என எத்துணை அழகிய உயரிய பண்பாடுகளை இஸ்லாம் வலியுறத்தியுள்ளது.

நீ எத்தகைய அறிவு படைத்தவனாகவும் இருக்கலாம், செல்வம், செல்வாக்கு, அதிகாரம், அந்தஸ்து படைத்தவனாகவும் இருக்கலாம் அவை அனைத்தும் தாயின் அன்பிற்கு முன்னால் தோற்றுப் போகின்றன, இன்றேல் சுவனம் உனக்கு இல்லை.

அதே போன்றே குழந்தைகளின் பிள்ளைகளின், உடன் பிறப்புக்களின், உறவுகளின் அன்பிற்கு முன்னால் அவை தோற்றுப் போகின்றன, இன்றேல் நீ மனிதனே இல்லை.
விசுவாசிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுதே ஒரு பிரகடனம் செய்து கொள்கின்றார்கள், உங்கள் மீது சாந்தி, அமைதி, சமாதனம் உண்டாகட்டும், இங்கு பரஸ்பர நல்லுறவு பேணப்படுதல் வலியுறுத்தப் படுகின்றது, விசுவாசிகளுக்கிடையில் நிலவுகின்ற பரஸ்பர அன்பும் சகோதரத்துவமும் ஒருவரின் நாவினாலோ நடத்தைகளினாலோ பாதிக்கப் படின் அவர் எம்மை சேர்ந்தவரல்ல என்று இறை தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள்.

பரஸ்பரம் அன்பு பாராட்டாத ஒரு சமூகத்தில் வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும், கருத்தாடல்களும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கின்றன, அங்கு மதத்திற்கு மதம் பிடிக்கின்றது, வெறிபிடிக்கின்றது, அங்கு புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சமயோசிதம், உணர்வுகளை மதித்தல் மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை ஒழுக்க விழுமியங்கள் உயிர்வாழ்வதில்லை.

மனிதனின் பிறப்பு வாழ்வு இறப்பு எல்லாமே சோதனைகள் நிறைந்தவை “துக்கம்”, “சோகம்” நிறைந்தவை எனக்கருதி வாழ்வில் இருந்து விடுதலை பெறுவதற்கான “பரிணிர்வான” நிலையடைய அல்லது காலம் ஆகிவிட வழி சொல்வதே “மைத்ரி” கருணை என்று சில வேதங்கள் போதிக்கின்றன.

இன்னும் சில வேதங்கள் தமது கொள்கையின் ஆள் திரட்டுவதற்கு அரசசார்பற்ற கருணை தூதாண்மை (Mercy Missions) நடாத்துகின்றார்கள். இந்த உலகம் அன்பிற்காக, அரவணைப்பிற்காக, கருணைக்காக ஏங்கி நிற்பதனை எல்லா வாழ்க்கைத் தத்துவங்களும் உணர்த்தி நிற்க, மனித குலத்தின் விமோஷனத்திற்கான கருணையின் தூதை சுமந்துள்ள சிறந்த உம்மத்தாக பறை சாற்றுகின்ற ஒரு சமூகம் உள்வீட்டில் கொள்கைகளின் பேரால் முரண்பாடுகளை விதைத்து அடிப்படை வாழ்க்கைத் தந்துவங்களை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றமை அபத்தமானது.

LEAVE A REPLY