அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து

0
224

இதனை நீங்கள் முதன்முறையாக அறிகின்றீர்கள் என்றால் மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள். உணவு உண்ணுவதில் கூட இத்தனை பிரச்சினைகள் மனிதனுக்கு இருக்கின்றது என்பதனை அறிவீர்கள். பலருக்கு அவரவருக்கே இந்த பிரச்சினைகள் இருக்கக் கூடும். முறையற்று உணவு உண்ணுதல் கீழ்க்கண்ட பிரிவுபடும்.

* பசியற்ற உள் நோய்
* பெரும் பசி
* மித மிஞ்சி உண்ணுதல்
* முறையற்று உண்ணுதல்
* கூடுதலாய் உண்ணுதல்

இவ்வாறு உண்ணுவது உயிரை பாதிக்கும் அளவு அவரது உடல் நிலையினை கெடுக்கலாம். மனநிலையினை வெகுவாய் கெடுக்கலாம்.

முதல் பிரிவான பசியற்ற உள்நோய் பாதிப்பில் ஒருவர் உணவு உட்கொள்வது மிக மிகக் குறைவாக இருக்கும். இது அவரை மிக ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.

* இருதய துடிப்பு குறையும்
* ரத்த கொதிப்பு குறையும்
* எலும்புகள் மெலிதாகும்
* தசைகள் மெலிந்து வலுவற்று இருக்கும்.
* எப்பொழுதும் சோர்வு, மயக்கம் என இருப்பார்கள்.
* வறண்டமுடி, முடியின்மை இருக்கும்.
இதனைப் பற்றி மேலும் பின்னால் பார்ப்போம்.

அடுத்தது பெரும் பசி பாதிப்பு

குறைந்த நேரத்தில் அதிக உணவு உண்பதும் பின் தானே அதனை வாந்தி எடுத்து வயிற்றின் கனத்தினை குறைத்துக் கொள்வதும் என இருப்பார்கள். இப்படி தொடர்ந்து இருப்பதால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பினை பாருங்கள்.

* வயிறு எதனையும் எதிர்த்து வெளிதள்ளும்.
* உடலில் நீர்வற்றும்.
* உடலில் சுண்ணாம்பு சத்து குறையும்.
* தாது உப்புகள் வெகுவாய் குறையும்.
* முறையற்ற இருதய துடிப்பு ஏற்படும்.
* இருதய பாதிப்பு, இறப்பும் ஏற்படும்.
* வயிறு வீக்கம்
* தடித்த தோல், மூட்டுகள் உருவாகும்.
* பல் உடையும்
* பல் எருமல் தேய்ந்து விடும்.
* வாயிலுள்ள சுரப்பிகள் வீங்கி விடும்.
* மலச்சிக்கல் ஏற்படும்.
* வயிற்றில் புண் உருவாகும்.
* கருத்தரிப்பில் பிரச்சினை உருவாகும்.
* மனச் சோர்வுடன் இருப்பர்.
* முறையற்ற மாத விலக்கு ஏற்படும்.

பொதுவாக 13-20 வயது வரை உடையோரை இந்த பாதிப்பு அதிகம் தாக்குகின்றது. இவர்கள் முதலில் சற்று எடை கூடியவர்களாக இருந்திருப்பார்கள். இதை நாட்பட்டு கண்டுபிடித்தால் சிகிச்சையின் முழுபலனை பெற முடியாது. இவர்களை பெற்றோர் சற்று முதலிலேயே கவனித்து மனநல சிகிச்சை, மருத்துவ சிகிச்சை, குடும்பத்தினர் ஆதரவு மூலம் இதிலிருந்து வெளிக்கொண்டு வந்து விட வேண்டும்.

முன்பெல்லாம் கல்லூரி மாணவியர், மாணவரிடமிருந்த இப்பழக்கம் இன்று பள்ளி மாணவ, மாணவியரிடமும் பரவுவதால் இதனைப்பற்றி சற்று அதிகம் கவனம் கொள்ள வேண்டி உள்ளது. எந்த குழந்தைகள் அடிக்கடி ஏதாவது குற்றம், குறையாக வீட்டாரால் பேசப்படுகின்றனரோ அவர்கள் நாளடைவில் முறையற்ற சாப்பிடும் வழக்கத்தினை பெறுகின்றார்கள். இதற்குத் தீர்வு அவரவர் மனஉறுதிதான். முறையான உணவு ‘ப்ளான்’ என்பதனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

* மன உளைச்சல சமாளிக்க உணவு நீர்வு அல்ல. உடற்பயிற்சி தியானம், ப்ராணாயாமம் போன்றவை இப்பழக்கம் நீங்க வெகுவாய் உதவும்.

* மூன்று வேளை உணவு, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ், கலோரி சத்து குறைவான உணவு போன்றவை முறையற்ற உணவு கொள்ளும் பழக்கத்தினை கண்டிப்பாய் நீக்கும். டயட்டிங் என்ற பெயரில் பட்டினி இருப்பது இப்பழக்கத்தினை அதிகப்படுத்தி விடும்.

* வீட்டில் நொறுக்கு தீனிகள், ஸ்வீட்ஸ், ஐஸ்க்ரீம் போன்றவைகளை வைக்கவே வைக்காதீர்கள். சாலட் காய் கறிகள், பழங்கள் போன்றவைகளே இவர்கள் கண்ணெதிரே இருக்க வேண்டும்.

* உடற்பயிற்சி எடை குறைய உதவுவதும் மட்டுமல்ல. உங்கள் மனச்சோர்வு, மன உளைச்சல் இவற்றினை நீக்கி உங்களை சுறுசுறுப்பாக்கும். மன உளைச்சல் இன்றி இருப்பவர் அதிகம் முறையற்று சாப்பிட மாட்டார்கள்.

* எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலையில் இருங்கள். வேலையில்லாமல் போரடித்து உட்கார்ந்தால் ஒருவர் ஏதாவது உண்பதை பழக்கமாக்கி கொள்வார்.

* பொதுவில் ‘டயர்ட்’ சோர்வாக இருக்கும் பொழுது மனிதனின் பழக்கம் ஏதாவது உண்ணவே செல்லும். எனவே நல்ல முறையான தூக்கப் பழக்கத்தினை ஏற்றுக் கொள்ளுங்கள். தேவையாயின் பகலில் 20 நிமிடம் கண்ணை மூடி சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுங்கள்.

* உங்கள் உடல் சொல்லும் பேச்சினை கேட்க பழகுங்கள். அது உங்களுக்கு பசியா, சோர்வா, தாகமா என சரியாய் சொல்லும். அநேகம் தாகத்தினை பசி என்று தவறாய் நினைப்பர்.

* தனியாக இருக்காதீர்கள். பலருடன் இருக்கும் பொழுது வெட்கத்தின் காரணமாக இப்படி உண்பதனை தவிர்த்து விடுவீர்கள்.
மிதமிஞ்சி உண்ணுதல்

பொதுவில் சற்று வசதி படைத்த அனைவருமே அதிகமாகத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவைக்கு அதிகமாகவே உண்கிறோம். பண்டிகை, பார்ட்டி என நமக்கு வாய்ப்புகளும் ஏராளம். விருந்தில் அதிகம் உண்டு முடித்த பின்புதான் இனிப்புகளும், ஐஸ்க்ரீம்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது.

விடாது ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களை கவனித்தால் இவர்களது மனு உளைச்சலும், மிகுந்த அழிவுப்பூர்வமான எண்ணங்களும் இவர்களை இவ்வாறு உண்ண வைக்கின்றன. இவர்கள் சாப்பிட்ட பிறகுதான் உண்டதை எண்ணி வருந்துவார்கள். இந்த பாதிப்பு மருத்துவ ரீதியாக சரி செய்யக் கூடியதே தகுந்த உதவி இவர்களுக்குத் தேவை.

இவ்வாறு உண்பவர்களை கவனித்தால் அதிக அளவு உணவினை உண்பார்கள். அவர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. பொதுவில் இது விடலைப் பருவ முடிவிலும் வாலிப பருவ ஆரம்பத்திலும் தோன்றும். காரணம் இவர்கள் தான். எடை கூடாது இருக்க வேண்டும். ஒல்லியாய் இருக்க வேண்டும்.

அழகாய் இருக்க வேண்டும் என்ற அதிக ஆர்வக் கோளாறினால் ‘டயட்’ என்ற பெயரில் முறையான தேவையான உணவினை உட்கொள்ளாது இருப்பர். பட்டினி கிடப்பர். பிறர் சாப்பிடும் பொழுது மனக்கஷ்டப்படுவர். இது தொடரும் பொழுது விபரீதமாய் விளைகின்றது. நாள் முழுவதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க ஆரம்பிப்பர். பசியே இல்லாவிடினும் சாப்பிடுவர். வயிறு நிரம்ப இருக்கும் பொழுதும் சாப்பிடுவர். அவர்களுக்கு அவர்கள் எப்பவும் சாப்பிடாது இருப்பது போலவே உணர்வர்.

* அடிக்கடி கட்டுப்பாடில்லாமல் உண்பது
* உண்டபின் மிகவும் குற்ற உணர்வாக நினைப்பது
* தேவையான உடற்பயிற்சியும் செய்யாது இருப்பது
* மன உளச்சலுக்கு ஆளாவது

இவையெல்லாம் இதன் அறிகுறிகள். இவர்கள் காலப் போக்கில் அதிக எடை, உடல் பாதிப்புகள், கொழுப்பு அதிகம் கூடுதல் போன்றவைகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.

இத்தகையோர்

* தேடி தேடி எதையாவது சாப்பிடுவார்கள்.
* வேக வேகமாக அதிக உணவினை சாப்பிடுவார்கள்.
* சாப்பிட்டு முடித்த உடனேயே எதையாவது சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
* மறைத்து வைத்துக் கொண்டும் அல்லது மறைந்து ஒளிந்து கொண்டும் சாப்பிடுவார்கள்.
* முறையான நேரமான உணவுப் பழக்கம் இருக்காது. இத்தகையோரின் மனநிலை.
* டென்ஷன், மனு உளைச்சல் இருக்கும். சாப்பிட்டாலே அந்த டென்ஷன் நீங்கும்.
* அதிகமாக உண்ணுகின்றோமே என மன சங்கடப்படுவர்.
* சாப்பிடும் பொழுது ஏதோ ரோபோ போல் உணர்ச்சியற்று இருப்பர்.
* சாப்பாட்டில் திருப்தி என்பதே இருக்காது.
* மனதில் இப்பழக்கத்தினை நிறுத்திவிட வேண்டும். எடைகுறைய வேண்டும் என்ற தவிப்பு இருக்கும்.

இப்படி தாறுமாறான உணவு பழக்கத்திற்கு பரம்பரை உணர்ச்சிகள் பழக்கம் இவை காரணமாகின்றன. மேலும் மூளையில் ஹைபோதலமஸ் எனும் பகுதி வயிறு நிறைந்து விட்டது. பசிக்கின்றது என்ற செய்திகளை முறையாய் அனுப்பாமல் இருக்கலாம். மூளையில் செரடோனின் என்ற பொருள் முறையான அளவு இல்லாத காரணத்திலே இப்படி முறையற்ற உண்ணும் பழக்கம் ஏற்படலாம். மருத்துவ ஆலோசனையும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் இவர்களை திருத்த உதவும்.

அதிக உணவு தரும் பிரச்சினைகள்

அதிகம் சாப்பிடுபவர்களுக்கு என்னென்ன உடல் பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

* சர்க்கரை நோய் 2-ம் பிரிவு
* பித்தம் நோய்கள்
* அதிக கொலஸ்டிரால்
* உயர் ரத்த அழுத்தம்
* இருதய நோய்
* சில வகை புற்று நோய் பாதிப்பு
* ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிங்
* மூட்டு வலி
* தசை வலி
* ஜீரண உறுப்பில் பாதிப்புகள்
* தூக்கத்தில் மூச்சு விட பிரச்சினை

LEAVE A REPLY