வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு

0
266

20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் டேரன் சேமி விருது வழங்கும் விழாவில் அளித்த பேட்டியில், ‘பல்வேறு பிரச்சினைகளுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் இந்த போட்டி தொடரில் நாங்கள் பங்கேற்றோம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு எந்தவித ஆதரவும் தெரிவிக்கவில்லை. வெற்றிக்காக வாழ்த்து கூட தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று வெளிப்படையாக விமர்சித்தது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் டேவ் கேமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விருது வழங்கும் விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் டேரன் சேமி தெரிவித்த கருத்து முறையற்றது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி தீர்வு காணப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சீனியர் வீரர்களுடன் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு (ஜூன் மாதம்) பேச்சுவார்த்தை நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸ் அணியினரை மூளை இல்லாதவர்கள் என்று விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் நிகோலஸ் அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கும் அவர் தனது விமர்சனத்துக்காக கேப்டன் டேரன் சேமியிடம் மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY