கடைசி ஓவரில் பறக்க விட்ட 4 சிக்சர்கள்! யார் இந்த பிராத்வெய்ட்

0
700

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் 4 பந்தில் இங்கிலாந்தின் உலகக்கிண்ண கனவை தகர்த்து விட்டார் கார்லோஸ் பிராத்வெய்ட்.

கடைசி ஓவர் வரை இங்கிலாந்துக்கு தான் கிண்ணம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸூன் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை தொடர்ச்சியாக விளாசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார் பிராத்வெய்ட்.

ஆமாம், யார் இந்த அதிரடி ஆல்-ரவுண்டர்? இந்த வலுவான வீரர் பிராத்வெய்ட் பார்படாஸைச் சேர்ந்தவர்.

முதல் தர கிரிக்கெட்டில் டிரினிடாட் அணிக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியிலேயே 90 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திறமையை நிரூபித்தார்.

2011ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான பிராத்வெய்ட் 8 போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் அதே ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தம் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 59 ஓட்டங்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார், ஆனால் இதில் 7 சிக்சர்கள் 1 பவுண்டரி அடங்கும். இதை வைத்து பார்த்தால் அவர் புதிய சிக்சர் மன்னராக வலம் வரலாம்.

2011ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிராத்வெய்ட் வந்தாலும் அடுத்த வாய்ப்புக்காக அவர் 3 ஆண்டுகள் காக்க நேரிட்டது. பின்னர் 2015ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளுக்காக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், டிசம்பர் 2015ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இதில் பாக்சிங் டே, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், தனது அறிமுகப் போட்டியில் 8ம் நிலையில் இறங்கி 59 ஓட்டங்கள் எடுத்தார். சிட்னி டெஸ்ட் போட்டியில் 71 பந்துகளில் 69 ஓட்டங்கள் விளாசினார்.

இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி இவரை ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பங்களிப்பினால் தான் இவருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தது.

ரசிகர்கள் பிராத்வெயிட் அதிரடியை மீண்டும் காண, இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நடப்பு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 8ம் திகதி தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY