சாவகச்சேரியில் வெடி பொருட்கள் கூட்டு எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி: எஸ்.எம்.மரிக்கார்

0
159

(ஹாதி)

யாழ். சாவகச்சேரியில் வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவமானது, கூட்டு எதிர்க்கட்சியினரும், புலிகளும் செய்த சூழ்ச்சி என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அன்று வெள்ளையர்கள் முன்னிலையில் வீரர்களான கூட்டு எதிர்க்கட்சியினர் தற்போது ஜெனிவாவுக்கு சென்று வெள்ளையர்கள் முன்னால் மண்டியிடுகின்றனர். இவர்கள் ஜெனிவாவுக்கு செல்லும் போதுதான் வடக்கில் சில இடங்களில் தற்கொலை அங்கிகளை கண்டுபிடிக்க முடிகின்றது.

தற்கொலை செய்து கொள்ளும் அணிகள் பற்றிய பேச்சுகள் எழுகின்றன. கூட்டு எதிர்க்கட்சி ஜெனிவா செல்லும் போது வடக்கில் தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டமை எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குண்டுகளை வெள்ளவத்தையில் உள்ள வீடொன்றுக்கு கொண்டு வந்து கொழும்பில் வெடிக்க வைக்க போகின்றனர் என்று ஜீ.எல். பீரிஸ் கூறுகின்றார்.

யாருடனாவது இணைந்து இந்த அரசாங்கத்தை கவிழ்த்து விட வேண்டும் என புதுமையான தேவை கூட்டு எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. கண்டுபிடிக்க இன்னும் நிறைய குண்டுகள் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். புலனாய்வுப் பிரிவினருக்கும் படையினருக்கும் தெரியாத விடயங்கள் இவர்களுக்கு தெரிந்துள்ளது.

இது இவர்கள் இரண்டு தரப்பும் இணைந்து நாட்டை பிரிக்க மேற்கொண்ட நாடகமோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு பணத்தை கொடுத்தே இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். இதனால், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மீதமுள்ள விடுதலைப் புலிகளை சேர்த்து கொண்டாலும் ஆச்சரியமடைய வேண்டிய விடயம் அல்ல எனவும் எஸ்.எம். மரிக்கார் கூறியுள்ளார்.

LEAVE A REPLY