ஒரே இரவில் ஒன்பது கடைகளில்..? மக்கள் பரபரப்பு

0
288

(ஹாதி)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒன்பது வர்த்தக நிலையங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு பணம் உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று-அம்பாறை பிரதான வீதியில் உள்ள அரசயடிப் பிரதேசத்தில் ஏழு வர்த்தக நிலையங்களும் அக்கரைப்பற்று ஏ.வீ.வீ வீதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையமும், அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டாரத்தினை அண்டிய பிரதேசத்திலுள்ள ஒரு வர்த்தக நிலையமுமே இவ்வாறு உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று அரசயடியில் உள்ள அனீஸா மோட்டர்ஸ் எனும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் கொண்ட வர்த்தக நிலையத்தில் இருந்த ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ரூபா பணம் இதன்போது களவாடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் எம்.எம்.சலாஹதீன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளார்.

இதுதவிர அப்துல் கபூர் அன் சன்ஸ் எனும் வர்த்தக நிலையத்தின் முன் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூபா பத்தாயிரம் களவாடப்பட்டுள்ளதாகவும், எம்.எஸ்.எம்.ஹாட்வெயார் வர்த்தக நிலையத்தில் 25 ஆயிரம் ரூபா களவாடப்பட்டுள்ளதாகவும் அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று ஏ.வீ.வீ வீதியில் அமைந்துள்ள அலாவுதீன் ரேடர்ஸ் மற்றும் அக்கரைப்பற்று நகர் பிரதேசத்திலுள்ள பரகத் ரேடர்ஸ் எனும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் முன் நுழைவாயில்கள் உடைக்கப்பட்டு காணப்படுவதுடன் அந்த நுழைவாயில்களிலிருந்த பூட்டுகள் களவாடப்பட்டுள்ளதாகவும் அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY