டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ரூ.23 கோடி பரிசு

0
234

வெஸ்ட்இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2–வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது.

ஜோரூட் அதிகபட்சமாக 36 பந்தில் 54 ரன்னும் (7 பவுண்டரி), பட்லர் 22 பந்தில் 36 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பிராவோ, பிராத் வெயிட் தலா 3 விக்கெட்டும், சாமுவேல்ஸ் பத்ரி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 2–வது தடவையாக சாம்பியன் பட்டம் பெற்றது. இதற்கு முன்பு 2012–ம் ஆண்டு கோப்பையை கைப்பற்றி இருந்தது.

வெஸ்ட்இண்டீஸ் அணி உலககோப்பையை வெல்ல சாமுவேல்ஸ்– பிராத் வெயிட் ஜோடி காரணமாக இருந்தது.

சாமுவேல்ஸ் 66 பந்தில் 85 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), பிராத்வெயிட் 10 பந்தில் 34 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அந்த அணி ஒரு கட்டத்தில் 15.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 107 ரன் என்ற நிலையில் இருந்தது. இதனால் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று அனைவராலும் கருதப்பட்டது.

ஆனால் 7–வது விக்கெட்டான சாமுவேல்ஸ்– பிராத்வெயிட் ஜோடி அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றி வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது. கடைசி ஓவரில் பிராத்வெயிட் தொடர்ந்து 4 சிக்சர் அடித்து முத்திரை பதித்தார்.

டேவிட் வில்லி 3 விக்கெட்டும், ஜோரூட் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.23.2 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2–வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.9.94 கோடி கிடைத்தது. அரை இறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ.4.9 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

2014–ம் ஆண்டு உலக கோப்பையில் வழங்கிய பரிசு தொகையில் இருந்து இது 80 சதவீதம் கூடுதலாகும்.

இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை சாமுவேல்ஸ் பெற்றார். 273 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இதேபோல பெண்கள் பிரிவிலும் வெஸ்ட்இண்டீஸ் உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அந்த அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2020–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

LEAVE A REPLY