ஆர்மேனிய மற்றும் அசர்பைஜான் துருப்புகளிடையே பாரிய மோதல்

0
190

சர்ச்சைக்குரிய காகசஸ் பகுதியான நகோர்னோ கரபாக் பிராந்தியத்தில் அசர்பைஜான் மற்றும் ஆர்மேனிய துருப்புகளுக்கு இடையில் பாரிய மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பு துருப்பினர்களும் கனரக ஆயுதங்கள், மோட்டார் குண்டுகள் மற்றும் பீரங்கிகள் கொண்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்டிருக்கும் இந்த மோதலில் குறைந்தது 30 படையினர் கொல்லப்பட்டிருப்பதோடு சிவிலியன்களும் பலியாகி உள்ளனர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது தொடக்கம் நகோர்னோ கரபாக் பிராந்தியம் ஆர்மேனிய இன பிரிவினைவாதிகளின் கையில் உள்ளது.

முன்னரங்கில் தொடர்ந்து பதற்ற சூழல் நீடிப்பதாக அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அங்கீகரிக்கப்படாத நகோர்னோ கரபாக் குடியரசு குறிப்பிட்டுள்ளன.

ஆர்மேனிய படையினர் முன்னரங்குகளில் இருக்கும் தமது ஆயுதப் படையினர் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக அசர்பைஜான் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஆர்மேனிய ஆதரவு கரபாக் அரசின் பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பில், அசர்பைஜான் ரொக்கெட்டுகளை வீசியும், பீரங்கிகள் கொண்டும் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.

இரு தரப்புக்கும் ஆயுதம் விற்கும் ரஷ்யா, உடன் மோதல் நிறுத்தம் ஒன்றை கடைப்பிடிக்குமாறும் அமைதி காக்குமாறும் இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்த மோதலை ஆரம்பித்தது குறித்து இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த மோதலில் 18 ஆர்மேனிய இன துருப்பினர் கொல்லப்பட்டதாக ஆர்மேனியா குறிப்பிட்டதோடு, அசர்பைஜானின் 12 படையினர் கொல்லப்பட்டதாக அந்த நாடு கூறியுள்ளது. கரபாக் பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பில், 12 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராமமொன்றின் தந்திரோபாய ரீதியில் முக்கியம் கொண்ட இரு குன்று பகுதியில் இருக்கும் தமது படையினர் மீது முதலாவதாக பெருமளவில் பீரங்கி குண்டுகள் மற்றும் ரொக்கெட் குண்டுகள் விழுந்ததாக அசர்பைஜான் குறிப்பிட்டுள்ளது.

எனினும் டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் கொண்டு அசர்பைஜான் பாரியதொரு தாக்குதலை நடத்தியதாக ஆர்மேனிய அரசு குறிப்பிட்டுள்ளது.

1980களில் ஆரம்பமான இரு தரப்புக்கும் இடையிலான மோதல் சோவியட் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முழுமையான யுத்தமாக உச்சம் பெற்றது. 1994 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படும் முன்னர் சுமார் 30,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

குறித்த பிராந்தியம் அசர்பைஜானுக்குள் இருந்தபோதும், ஆர்மேனிய இனத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆர்மேனிய இராணுவ மற்றும் நிதி உதவியோடு தனி நிர்வாகம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் அடிக்கடி மோதல்கள் இடம்பெறுகின்றன.

பரந்த அளவிலான யுத்த நிறுத்த மீறல் குறித்து, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு பெரும் கவலையை வெளியிட்டுள்ளது.

நிலைமையை சுமுகப்படுத்த ரஷ்ய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் தமது அசர்பைஜான் மற்றும் ஆர்மேனிய சகாக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். “பாரிய அளவிலான யுத்த நிறுத்த மீறல் குறித்து அமெரிக்கா கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறது” என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மன்றமும் யுத்த நிறுத்த மீறலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

நகோர்னோ கரபாக் பிரச்சினை

* கிறிஸ்தவ ஆர்மேனியர், துருக்கிய முஸ்லிம் மற்றும் பாரசீக செல்வாக்கு காரணமாக நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தே இந்த பிராந்தியத்தில் மோதல் நீடிக்கிறது.

* 1980களில் ஆர்மேனியாவுடன் இணைய பிராந்திய பாராளுமன்றம் ஆதரவாக வாக்களித்ததை அடுத்து விரிசல் வன்முறையாக வெடித்தது.

* அசர்பைஜானில் இருக்கும் ஆர்மேனிய இனத்தினர் அங்கிருந்து துரத்தப்பட்டதோடு கரபாக் பிராந்தியத்தில் சுமார் 25 வீதமாக இருந்த அசரிய இனமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

* 1994 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தின்படி, கரபக் பிராந்தியம் மற்றும் அதன் எல்லை பகுதிகள் அசர்பைஜான் ஆட்புலத்தில் இருந்து விடுபட்டு ஆர்மேனிய கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

* ஆர்மேனிய மற்றும் அசர்பைஜான் தலைவர்களுக்கு இடையிலான அமைதி செயற்பாடுகளில் 2009 ஆம் ஆண்டு முன்னேற்றம் ஏற்பட்டபோதும் அதனைத் தொடர்ந்து பாரிய அளவில் யுத்த நிறுத்த மீறல்கள் ஏற்பட்டன.

* கரபாக் என்பது பாராசீக பூர்வீகம் கொண்ட துருக்கிய சொல்லாகும். இதற்கு ‘கறுப்பு தோட்டம்’ என பொருளாகும். அதேபோன்று ‘நகோர்னோ’ என்பது ரஷ்ய சொல் என்பதோடு அதற்கு ‘மலை’ என்று பொருளாகும்.

LEAVE A REPLY