பெற்றோர் வழிதவறுவதால் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை: பாடசாலை அதிபர் ஏ. புட்கரன்

0
157

(ஏ.எச்.ஏ. ஹு ஸைன்)

பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெற்றோர்கள் சிலர் வழிதவறி நடப்பதனால் பெற்றோரை பிள்ளைகள் நம்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என மட்டக்களப்பு முனைத்தீவு சக்கி மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ. புட்கரன் தெரிவித்தார்.

மாணவர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் முயற்சியினால் பெரியபோரதீவு, முனைத்தீவு மற்றும் பட்டாபுரம் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் 203 பேருக்கு மக்கள் வங்கியின் சிசு உதான சிறுவர் சேமிப்பு புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்புப் பணம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற ;நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்

அண்மையில் எமது பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தாய் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்தபோது தந்தையினால் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட துயரமான சம்பவம் நடைபெற்றுள்ளதை ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.

ஒருசில பெற்றோரின் இத்தகைய செயல்பாட்டினால் ஏனைய பெற்றோருக்கும்; அவமானம் ஏற்பட்டு விடுகிறது.உலகினிலே சிறுவர்களில் 4 வீதத்தினர் பெற்றோர்களினாலும் 11 வீதத்தினர் நன்கு தெரிந்தவர்களினாலும் துஷ்பிரயேதகத்திற்குள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சிறுவர்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மாணவர்கள பணத்தை சேமிப்பது போல் நேரத்தையும் சேமித்து கல்வியில் சிறந்த அடைவு மட்டங்களைப் பெற வேண்டும்.

அண்மையில் வெளியாக க.பொ.த. பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவன் மேற்கூறப்பட்ட சேமிப்பினால் தான் உயர் சித்தியைப் பெற்றான் அவரின் முன்மாதிரியை கடைப்பிடித்து நீங்களும் கல்வியில் சிறந்த அடைவு மட்டங்களைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

மக்கள் வங்கி அரசடிக் கிளையின் முகாமையாளர் றோட்டறியன் எஸ். சரவணபவன், மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் கலாநிதி கே. செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேமிப்பு புத்தகங்களை வழங்கி வைத்தனர்.

LEAVE A REPLY