மகளிர் டி20 உலகக்கிண்ணம்: முதன்முறையாக உலகக்கிண்ணம் வென்றது மேற்கிந்திய தீவுகள்

0
159

தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் -அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் மெல் லான்னிங் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன் படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஹெலி, வில்லானி களமிறங்கினர். ஹெலி (4) ஏமாற்ற, வில்லானி, அணித்தலைவர் மெக் லான்னிங் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இருவரும் அரைசதம் கடந்தனர். வில்லானி 37 பந்தில் 9 பவுண்டரி உட்பட 52 ஓட்டங்களும், அணித்தலைவர் மெக் லான்னிங் 49 பந்தில் 8 பவுண்டரி உட்பட 52 ஓட்டங்களும் எடுத்தனர்.

கடைசியில் களமிறங்கிய எலஸ் பெரி அதிரடி காட்டினார். அவர் 23 பந்தில் 2 சிக்சர்கள் உட்பட 28 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது.

பிளாக்வெல் (3), ஜோனசென் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், டிண்ட்ரா டொட்டின் 2 விக்கெட் எடுத்தார்.

பதிலடி கொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி:

இதன் பின்னர் 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக மாத்திவ்ஸ், அணித்தலைவர் ஸ்டபேனி டெய்லர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின்னர் இருவரும் அதிரடி காட்ட ஆரம்பித்தனர்.

மாத்திவ்ஸ் 66 ஓட்டங்களும், ஸ்டபேனி டெய்லர் 59 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ஓட்டங்கள் சேர்த்தது.

இதன் பின்னர் டொட்டின் 17 ஓட்டங்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 19.3 ஓவரிலே 149 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை வென்றது.

அதேசமயம் டி20 உலகக்கிண்ண அரங்கில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்திரேலியாவின் வெற்றி பயணமும் முடிவுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY