இந்த நாட்டில் சிறுபான்மை இனங்கள் அச்சமின்றி வாழ உதவுங்கள்; ஜனாதிபதியிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள்

0
283

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Eastern CM. Naseer Ahamed“இந்த நாட்டில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள், தோட்டத் தொழிலாளர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் நிம்மதியாக அச்சமின்றி வாழ உதவுங்கள்” என ஏறாவூருக்கு வந்திருந்த ஜனாதிபதியிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் முயற்சியினால் 5000 குடும்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் ஏறாவூரில் நிருமாணிக்கப்பட்ட ஆயத்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறித் தொழிற்சாலை என்பனவற்றை வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்த நிகழ்வுக்கு தலைமையேற்றுப் பேசும்போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய முதலமைச்சர் கூறியதாவது,

00193_20160402-21024673“கிழக்கு மாகாண மக்களாகிய நாங்கள் உங்கள் கைகளைப் பலப்படுத்துவதற்காக ஒன்றுபட்டுள்ளோம்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாட்டை இன மத மொழி கட்சி பேதங்களுக்கப்பால் ஒன்றிணைத்த ஒரே தலைவர் நீங்கள் என்பதால் நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இந்த நாட்டிலே சிதறி வாழ்கின்ற சிறுபான்மையினர் அச்சமும் பீதியுமின்றி நிம்மதியாக வாழ்வதற்குத் தோதான அத்தனை ஏற்பாடுகளையும் நீங்கள் உங்களது ஆட்சிக் காலத்தில் செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

உங்களுடைய நல்லாட்சிக் காலத்தில் இந்த நாட்டின் இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும். இல்லாது போனால் இந்த நாடு அடுத்த பல தசாப்தங்களிலும் அமைதியை இழந்து நிற்க வேண்டியிருக்கும்.

DSC03301இந்த அப்பாவி ஏழை மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக துயரங்களைச் சுமந்து கொண்டு வாழ்ந்தவர்கள். இன்னமும் அவர்களது துயரத்திற்கு நிரந்தரமான முடிவு கிட்டவில்லை.

உறவுகளான உயிர்களை இழந்து விதவைகளாகி அநாதைகளாகி அங்கவீனர்களாகி அல்லற்பட்டு நொந்து நொடிந்து போயுள்ளவர்களின் துயரத்திற்கு முடிவு கண்டாக வேண்டும். அதற்குரிய அரிய சந்தர்ப்பம் இதுவாகும்.

நீங்கள் கடந்த ஜனவரி 8 இல் நல்லாட்சியைத் தொடங்கிய பின்னர் நாங்களும் கிழக்கு மாகாணத்திலே அகில இலங்கைக்கும் முன்னுதாரணமாக சகல இனங்களையும் இணைத்த ஒரு ஐக்கிய மாகாண சபை நிருவாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

DSC03270எனது தலைமையிலான இந்தக் கிழக்கு மாகாண சபையிலே இப்பொழுது ஊழலற்ற முறையில் சீரும் சிறப்புமான வினைத்திறனுள்ள நிருவாகம் நடந்து கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளையும் சேர்ந்து மூவின பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து சிறப்பான மாகாண நல்லாட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

கிழக்கு மகாணத்திலுள்ள முதலாவது பிரச்சினை தொழிலில்லாத் திண்டாட்டம். இரண்டு இலட்சம் பேர் தொழிலற்று இருக்கின்றார்கள். இவர்களில் நான்காயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் நியமனமின்றி உள்ளார்கள்.

DSC03322பட்டதாரிகள், தொண்டராசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரத் தொண்டர்கள் இப்படிப்பட்டோர் நாளாந்தம் எமது கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் அமர்ந்து தொழில் கேட்டு போராட்டம் நடத்துகின்றார்கள். நிரந்தர நியமனம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்கள். அதற்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம்.

இதற்குத் தீர்வு காண நாம் திட்டங்களை வரைந்துள்ளோம்.

2030 ஆம் ஆண்டளவில் கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், வருமானம், தொழில் ஆகியவற்றில் அபிவிருத்தி அடைந்து பொருளாதாரத்திலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுள்ள ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவதற்கான தூரநோக்குள்ள வரைவை நாம் ஆய்வு செய்து தயாரித்துள்ளோம்.

இதனை மத்திய அரசும் மாகாண அரசும் சேர்ந்து அமுல்படுத்தினால் எமது கிழக்கின் அபிவிருத்தித் தூரநோக்கை அடைந்து கொள்ள முடியும். இதற்கு நல்லாட்சியின் நாயகனான ஜனாதிபதியாகிய உங்களின் ஒத்துழைப்புத் தேவை” என்றார்.

LEAVE A REPLY