இலவச உம்ராவும் குறோதங்களும்: ஜுனைட் நளீமி

0
365

Junaid Naleemiஸ்ரீ லங்கா ஹிரா பெளண்டேஷனால் இதுவரை ஹஜ் உம்ரா நிறைவேற்ற வசதியற்ற பள்ளிவாசல்களின் இமாம், முஅத்தின்மார்களுக்கான இலவச உம்ரா திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

500 பேர் இத்திட்டத்தின் கீழ் புனித பயணத்தை பெற வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் முதல் 100 பேர் கொண்ட குழுவினர் அண்மையில் மக்கா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த திட்டம் தொடர்பாக நல்ல பல கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதிலும் இந்நடவடிக்கைக்கு சுய குரோதங்கள் அடிப்படையில் சேறு பூசும் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெரிவு தொடர்பாகவும் தெரிவுக்குழு தொடர்பாகவும் உண்மைக்குப்புறம்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவில் ஒரு அங்கத்தவர் என்ற வகையில் குறித்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

குறித்த நிகழ்ச்சித்திட்டம் சவூதி அரேபிய நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உன்மையில் இது ஹிரா நிறுவனத்தின் தலைவர் ஹிஸ்புல்லாஹ் அமைச்சரின் வேண்டுகோளுக்கமைய சவூதிய தனவந்தர் ஒருவரினால் வழங்கி வைக்கப்பட்டதாகும்.

Umrah Hizbullahஅத்தோடு வழங்கப்பட்ட நிதியை விட மேலதிக செலவுகளான பாஸ்போர்ட்டுக்கான செலவு, பாஸ்போட் எடுக்கச்செல்வதற்கான செலவு, இஹ்ராம் துணி, பிரயாணிகளுக்கான கைச்செலவாக சவூதிய ரியால் 500 உற்பட பிரியாவிடைக்கான நிகழ்ச்சி ஒழுங்கு செலவுகள் என பல செலவுகள் அமைச்சரின் தனிப்பட்ட நிதியில் இருந்தே வழங்கப்பட்டதனை ஹிரா மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.

சாதாரணமாக 12 நாட்கள் உம்ராஹ் பயணத்தை மேற்கொள்ளும் யாத்திரிகர்களிடம் இருந்து முகவர் நிறுவனங்கள் ஒரு இலட்சம் தொடக்கம் ஒன்று இருபது வரை பணமாக பெற்று வருகின்ற நிலலையில், ஹிரா 15 நாட்கள் கொண்ட பிரயாணத்தை மேற்கொண்டு சவூதியில் தங்கியிருக்கும் காலங்களில் பல்வேறு வரலாற்று இடங்களையும் தரிசிப்பதற்கு பிரத்தியேக பஸ்களை தயார்படுத்தி பல்வேறு பயிற்சி பாசறைகளையும் வழங்குவதற்கு எவ்வளவு செலவு ஏற்படும் என்பதனை மனச்சாட்சியுடன் சிந்திக்க வேண்டியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புச் செய்யப்பட்ட போது சுமார் 400 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.

இதில் முன்னுரிமைப்படுத்துவது தொடர்பில் தெரிவுக்குழு சுதந்திரமாக செயற்பட்டதுடன் முதல் நூருபேரை தெரிவு செய்வதில் சில நிபந்தனைகளை உள்ளடக்கியது. இதில் பிரதானமாக 55 வயதை தாண்டி இருப்பதுடன் குறைந்தது 10 வருடங்கள் கடமை புரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையினை தெரிவுக்குழு முன்வைத்தது.

இந்நிபந்தனை தெரிவுக் குழுவினாலேயே முன்வைகப்படடதன்றி வேறு எவரும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எதிர்வரும் காலங்களில் வயதெல்லையை குறைப்பதற்கும் குழு ஆலோசனை செய்து வருகின்றது.

தெரிவுக்குழுவில் மஹ்ரூப் என்ற பாடசாலை அதிபரோ அல்லது பயணிகளில் அவ்வாறு ஒருவரோ இடம்பெறவில்லை என்பதனை குறிப்பிட்டுக்கூற முடியும். தெரிவுக்குழுவில் அமைச்சரின் அரசியல் கருத்துக்களில் சில போது கடுமையான மாற்றுக்கருத்து கொண்டவர்களும் இடம்பெற்றமையை உறுதிபடக்கூற முடியும்.

அதே போன்று தெரிவுக்குழு ஒரு சதத்தினையும் கூலியாக பெறாமல் அல்லாஹ்வுக்காக வேண்டியே இத்தகைய நல்ல விடயங்களில் இறவனின் திருப்தியை எதிர்பார்த்தே செயட்பட்டது என்பதனையும் உறுதிபடக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பொதுவாக ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது எவ்வாறு அமைய வேண்டும் என நிதி வழங்குனர்கள் நிபந்தனைகளை வைப்பர். அவை உரிய முறையில் அமையுமானால் அதுவே வெற்றிகரமானதாகும். ஒரு வாதத்திற்கு அத்திட்டத்தில் குறைந்த செலவில் எதிர்பார்க்கப்பட்ட நிறைந்த பயன் கிடைக்குமானால் எஞ்சிய நிதி நிறுவனத்தின் வேறு தேவைகளுக்கும் அதன் பணியாளர்களுக்கு சம்பளமாகவும் வழங்கப்படுவது இயல்பானது.

இலங்கையில் இயங்கும் எந்தவொரு அமைப்பும் அது இஸ்லாமிய அமைப்பாக இருந்தாலும் கூட நிர்வாக செலவு இல்லாமல் வருகின்ற உதவித்தொகை முழுவதனையும் செலவு செய்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை காணமுடியாது.

சர்வதேச தொண்டு நிறுவங்களில் பணிபுரியும் நபர்களைப்பார்த்து அவர்கள் குளிரூட்டப்பட்ட வாகனம், தங்குமிட வசதிகள், மேலதிக கொடுப்பனவுகள், கொழுத்த சம்பளம் பெருகின்றனர் என பெருமைப்பட்டுக் கொள்ளும் சமூகத்தில் உள்ள சிலர், இத்தகைய நிறுவனங்களின் பணியாளர்கள் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி குடும்பங்களை துறந்து எதுவித வாழ்வாதார உதவிகளும் இன்றி பணி செய்ய வேண்டும் என கருத்து தெரிவிப்பது எத்தகைய மன நிலை என சிந்திக்க வேண்டியுள்ளது.

சாதரணமாக உம்ரா கடமைக்காக பயணிகளை கொண்டு செல்லும் முகவர் நிலையங்கள் வழிகாட்டிகளாகவும், சமையல் காரர்களாகவும் பலரை கொண்டு செல்கின்றனர். குறித்த இப்பயணத்தில் வயது முதிர்ந்த பலரும் செல்வதனால் உதவியாக நான்கு பேரை கொண்டு சென்றது நியாயமானது மாத்திரம் அல்லாமல் நிதி வழங்குனருக்கு தெரிந்த விடயமுமாகும்.

பயணிகளின் பெயர்ப்பட்டியல், வயது, தொழில் என்பன தெளிவாக அனுப்பப்பட்டு சரிகண்டே குறித்த குழு மக்கா பயணித்துள்ளது. பல இலட்சங்களை செலவு செய்யும் ஒருவருக்கு அடிப்படை அறிவு இல்லாதவர் என்று குறிப்பிட முனையும் இத்தகைய காழ்ப்புணர்ச்சி மிக்க கருத்துக்கள் நகைப்புக்கிடமாக உள்ளது.

பயணிகளை நேரடியாக வரவேற்ற குறித்த கொடையாளிக்கு இவை புரியவில்லை என்றால் அரபிகள் மடையர்கள் என்ற வாதத்தை துவக்கி விடுவதாக இத்தகைய கருத்துக்கள் அமையும்.

எந்தவொரு நிகழ்வுக்கும் ஆவணத்தொகுப்பு முக்கியமானதே. வெருமனே குளிரூட்டிய அறைகளில் இருந்து கொண்டு அல்லது விடுமுறை வருகின்ற போது பல இலட்சங்கள் செலவு செய்து ஒரு இஸ்லாமிய சகோதரனை கொள்கை என்ற பேரால் தூற்றி விட்டு அல்லது களியாட்ட திருமணங்களில் செல்பி எடுத்துக்கொண்டு பேஸ்புக் வலைத்தளங்களில் பிரபல்யம் தேடும் இத்தகைய சிலர் மத்தியில், பல ஆண்டுகளாக பல நூருபேரை வழியனுப்பி தமக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருந்த இமாம்களுக்கும் கதிப்களுக்கும் கிடைத்த இத்தகைய வரலாற்று நிகழ்வை ஆவணப்படுத்தல் ஒன்றும் பிழையானதாக அமையாது.

பிழைகள் திருத்தப்பட வேண்டும்

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு தேவைகளுக்கு பரிகாரமும் ஆலோசனைகளும் சொல்ல வேண்டிய பலர் இவ்வாறு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு சமூகத்தை பிழையாக வழிநடாத்த முனைவது புத்திஜீவித்துவமாக அமையாது.

சூரது தெளபா 122 வது வசனம் “உங்களில் சமூகத்தில் ஒரு கூட்டத்தார் மார்க்கத்தை கற்று மீண்டும் தங்களது சமூகத்தாரிடம் வந்து அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்” என கூருகின்ற போது வாழ்க்கை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து வெளிநாட்டு தேர்வுகளை வாழ்க்கையாக கொண்டு தனது சமூகத்திற்கு சரியான பதிலீடுகளை செய்யாமல் அவ்வப்போது பிழையான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருப்பது இஸ்லாமிய விழுமியமாகுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

சமூகத்தில் ஆட்சியாளன் பிழை விடும்போது சுட்டிக்காட்டுவது கடமையாகும். ஆனால் ஆதாரபூர்வமாக அவை அமைய வேண்டும். அவ்வாறு ஆதாரபூர்வமாக நிரூபனப்படுத்தும் போது உங்கள் வாதங்கள் மக்கள் மன்றில் நியாயமாக கொள்ளப்படும். சொன்னதும் கேட்டதும் என்பது இஸ்லாமிய ஒழுக்கவியல் அல்ல.

“ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

இந்த ஹதீசின் அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியில் எழுதுவதும் எழுதியதை பகிர்வு செய்துகொள்வதும் இத்தகைய நபர்கள் பொய்யர்கள் என்பதற்கு சான்றாக அமைந்துவிடும்.

அவதூரிலிருந்து ஈமானைப்பாதுகாப்போம்

வெருமனே அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் தனிமனித வாழ்வை சிதறடிப்பதுடன் சமூகத்திற்கு கிடைக்கின்ற நன்மைகளை இல்லாமல் செய்வது ஒரு முஸ்லிம் பண்பாக மாட்டது. எந்தவொரு விடயத்திலும் விமர்சனம் நியாயமானதாக அமைவதோடு புத்தி ஜீவிகள் என சொல்லிக்கொள்ளப்படு துறைசார் நிபுனர்கள், கலாநிதிகள் போன்றோர் தமது திட்ட முன்மொழிவுகளையும் சமூகத்தளத்தில் முன்மொழிய வேண்டும்.

விமர்சனம் என்பது மிக இலகுவானது. ஆனால் செயற்படுத்துகை என்பது எவ்வளவு கடினமானது என்பதனையும் விளங்கி கொள்ள வேண்டும். அவதூறு விடயத்தில் இஸ்லாம் மிக கடினமாக அமைகின்றது. 80 கசையடிகளை வழங்குமாறு குறிப்பிடுவதுடன் அவர்களது சாட்சியங்களை ஏற்க வேண்டாம் என குறிப்பிடுகின்றது.

இந்த உம்ரா விடயத்தில் இவர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு இலங்கையில் இஸ்லாமிய ஷரீஅத் இல்லாமல் இருப்பது இவர்களது நல்ல நேரமாக கொள்ள முடியும்.

“நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.” (அல்குர்ஆன்49:12)

இந்த வசனம் தெளிவாக அவதுறு குறித்து பேசுகின்றது. பாசிக்குடைய பண்புதான் அவதூரினை பரப்புதல் என்ற கருத்தில் குரான் எச்சரிப்பதை இஸ்லாமிய ஷரியாவில் நுனிப்புல் மேய்ந்த எம்மை விட அடிவரைக்கும் செல்லும் புத்திஜீவிகள் நன்கு விளங்கியிருப்பிர்கள் என கருதுகின்றேன்.

தவறுகள் செய்த மனிதனை மன்னிக்க முடியாது என்றிருந்தால் இஸ்லாமே எமக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இஸ்லாமிய வரலாற்றில் பல பாரிய குற்றங்களைச் செய்தவர்கள் மன்னிப்பு பெற்றிருப்பதனை காணமுடிகின்றது.

தனிமனித மானத்தை வேண்டுமென்றே உடைத்து கஹ்பாவை உடைத்த பாவங்களை சுமது கொள்வது ஒரு உண்மை முஸ்லிமுக்கு ஆகுமானதாக இல்லை. மனிதன் என்ற ரீதியில் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள இடம் கொடுக்காமல் இருப்பதற்கும், சொந்தங்கள் பந்தங்கள் செய்த தவறுகளுக்கும் தனிமனிதனை தண்டிக்க முனைவதும் ஷரியாவாக கொள்ள முடியாது.

எனவே எதிர்வரும் காலங்களில் இதய சுத்தியுடன் நல்லவற்றின் பால் தனிமனிதர்களையும் சமூகத்தையும் நடுநிலைமையாக வழிநடாத்த வேண்டியது சமூகத்தின் புத்தி ஜீவிகளுக்கும் கலாநிதிகளுக்கும் கடமையாகும் என்பதே காலத்தேவையாகும்.

LEAVE A REPLY