கெய்லைப் போன்று 15 பேர் உள்ளனர் ; டேரன் சம்மி

0
198

கிறிஸ் கெயில் சிறந்த வீரர்தான் என்றாலும் எங்களிடம் அவரை போல 15 மேட்ச் வின்னர்கள் உள்ளனர் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் டேரன் சம்மி தெரிவித்தார். உலகக் கிண்ண இருபதுக்கு – 20 அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றதன் பின்னர் கருத்துத் தெரிவித்த மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் டேரன் சம்மி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெற்றி குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிறிஸ் கெயில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 2 ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்த நிலையிலும் மிகப்பெரிய வெற்றி இலக்கை விரட்டி பிடித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.

பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தியிருப்பது எமது அணிக்கு மிகப்பெரிய மன உறுதியை தந்துள்ளது. இந்தியா மேலும் 10 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நிலைமை கஷ்டமாகியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தோம்.

கெயில் விரைவில் ஆட்டமிழந்தாலும் சிம்மன்ஸ், சார்லஸ் மற்றும் ரசல் ஆகியோர் பொறுப்பை தாங்கள் எடுத்துக்கொண்டு வெற்றி பெறச் செய்தனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் நான் வேண்டுதல் வைத்திருந்தேன். ஐந்து போட்டிகளிலும் நானே நாணயச் சுழற்சியில் வென்றது எனக்கே ஆச்சரியம்தான். நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தியா வந்தோம்.

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலக சாம்பியன் ஆகியுள்ளது. அதேபோன்று எமது பெண்கள் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையெல்லாம் உத்வேகமாக கொண்டுதான் நாம் விளையாடி வென்றோம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி என்பது இப்படிப்பட்டதுதான். கிறிஸ் கெயில் நிறைய நெருக்கடிக்கு மத்தியில் ஆட வேண்டியுள்ளதால் சறுக்குவதாக விமர்சனங்கள் கூறப்படுகிறது. ஆனால் எங்கள் அணியில் கிறிஸ் கெயில் மட்டுமல்ல, 15 பேரும் மேட்ச் வின்னர்கள்தான் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY