ஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை!

0
160

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் அவரிடம் கையளிக்கும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை என அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சியின் பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட யாப்புத் திருத்தத்தின் மூலமே அவரது அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாகவும் அதனை மாற்றுவதாயின் அடுத்த பேராளர் மாநாட்டிலேயே தீர்மானம் எடுக்க முடியும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இப்பிரச்சினை தொடர்பில் அடுத்த அதியுயர் பீடக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனவும் அங்கு உடனடித் தீர்வு எட்டும் வாய்ப்பு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாம் அந்த முக்கியஸ்தரிடம் விளக்கம் கேட்ட போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கடந்த நவம்பர் மாதம் கண்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் கட்சியின் உயர்பீடச் செயலாளர் எனும் புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

மாதாந்த சம்பளத்திற்கு உரித்துடைய இந்த உயர்பீடச் செயலாளர் நேரடி அரசியலில் ஈடுபட முடியாது என்பதுடன் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்பாடல்களை மேற்கொள்வது உள்ளிட்ட பொறுப்புகளை கொண்டிருப்பார் என யாப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பொறுப்புகள் யாவும் ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாலரிடமே இருந்து வந்தது. எனினும் இந்த யாப்புத் திருத்தத்தின் பிரகாரம் பொதுச் செயலாளர் இந்த அதிகாரங்களை இழந்துள்ளார். பேராளர் மாநாட்டில் இவ்விடயம் தலைவர் ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டு, பேராளர்களினால் அங்கீகரிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட போது பொதுச் செயலாளர் ஹசன் அலியும் அங்கிருந்தார். ஆனால் அவரோ வேறு உறுப்பினர்களோ ஆட்சேபனை எதனையும் வெளியிடவில்லை.

தற்போது பொதுச் செயலாளர் ஹசன் அலி, தனது அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவை மீளக் கையளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் அண்மையில் நடைபெற்ற தேசிய மாநாட்டையும் பகிஷ்கரித்துள்ளார். இதனால் கட்சிக்குள் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த பேராளர் மாநாடு வரை அந்த அதிகாரங்களை அவருக்கு மீளக் கையளிக்க முடியாது. அது தொடர்பில் அந்த பேராளர் மாநாட்டில் மீண்டும் யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” என்றார்.

LEAVE A REPLY