மின்சார கதிரையிலிருந்து காப்பாற்றிய அரசை மின்சாரத்தை துண்டிப்பதால் கவிழ்க்கமுடியாது: இம்ரான் MP

0
79

மின்சார கதிரையிலிருந்து காப்பாற்றிய அரசை மின்சாரத்தை துண்டிப்பதால் கவிழ்க்க முடியாது என தெரிவித்தார் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்.  ( 29-03-2016 )செவ்வாய்கிழமை கிண்ணியாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறுதெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும்உரையாற்றிய அவர்,

இன்று சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் எமது கட்சியின் மீது பாரதூரமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் இவர்களின் விமர்சனங்கள் அனைத்தும் வேடிக்கையானது.

அவர்களின் கட்சி உறுப்பினர்கள் பலர் அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சுகபோகங்களை அனுபவித்து விட்டு குற்றசாட்டுகளை மட்டும் ஐக்கிய தேசிய கட்சியின் மீது சுமத்துவதன் பின்னணியில் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் பல பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் பற்றி நாம் அறிவோம் ஆனால் இந்த வரிகளை அதிகரிக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு எமது அரசுதள்ளப்பட்டது. இதற்கு காரணம் ராஜபக்சவினர் இரகசியமாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களே. தற்போதே இவை ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன.

கடந்த ஆட்சியாளர்கள் ஒரு வரையறையில்லாமல் கடன் வாங்கி எமது நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர்.
இவர்கள் வாங்கிய கடன் மூலம் வெறும் கண்காட்சி அபிவிருத்தித்திட்டங்களே மேற்கொள்ளப்பட்டன.

கட்டம் கட்டமாக தேர்தல் நடாத்தி அப்பகுதிகளில் அபிவிருத்தி என்றபெயரில் கண்காட்சிகளே காண்பிக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. வேலை வாய்ப்புக்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு மேலாக நியமனங்களை வழங்கி அரச நிறுவனங்களை நட்டமடையச் செய்தனர்.

தற்போது நாட்டை என்னிடம் தந்து விடுங்கள் என ஹைபார்கில் வைத்து கூச்சளிடுகின்றார். இந்த நல்லாட்சியை கவிழ்ப்பதற்கு பல சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள். அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கு பின்னாலும் ஏதோசதித்திட்டம் இருக்குமோ என சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது.

உலகில்உள்ள சிறந்த மின்மாற்றிகளே வெடித்துச்சிதறின. உலகில் எங்கும் இதற்கு முன் இவ்வாறு நடைபெற வில்லை. அத்தோடு நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழப்பதற்கும் இவர்களேகாரணம்.

அனல் மின் நிலைய இயந்திரங்களிலும் ஊழல் செய்து தரம் குறைவான இயந்திரங்களை கொள்வனவு செய்துள்ளனர். மின்சார கதிரையிலிருந்து காப்பாற்றிய அரசை மின்சாரத்தை துண்டிப்பதால் கவிழ்க்கமுடியாது.

இவர்கள் பாதாளத்துக்குள் தள்ளிய எமது பொருளாதாரத்தை சீர் செய்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரபடுத்த வேண்டிய பொறுப்பு எமது அரசுக்குள்ளது. இதற்காகவே சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஏற்படபோகும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முக்கியமாகும். அத்தோடு நாம் தேர்தல் காலத்தில் பத்து இலட்சம் வேலை வாய்ய்புக்களை உருவாக்குவதாக உங்களுக்கு வாக்குறுதியளித்துளோம். பத்து இலட்சம் வேலை வாய்ய்புக்களையும் இலங்கையில் மாத்திரம் ஏற்படுத்தமுடியாது.

இதற்காக ஐரோப்ப அமெரிக்க சந்தைகளையும் தேடவேண்டும். ஜனாதிபதி பிரதமரின் வெளிநாட்டு விஜயங்கள் மூலம் பல வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளது. அத்துடன் எட்கா உடன்படிக்கை மூலமும் பெருமளவிலான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். எட்கா உடன்படிக்கையின் வரைபு இன்னமும் முழுமைபெறவில்லை. ஆகவே பிறக்காத குழந்தைக்கு யோசியம் பார்க்கவேண்டாம் என எதிர்கட்சியினரிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எட்கா உடன் படிக்கையானது கடந்த அரசினாலேயே கொண்டுவரப்பட்டது. ஆனால் அதில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பலவிடயங்கள் காணப்பட்டன. அவை அனைத்தையும் நீக்கி நாட்டுக்கு பயன் தரக்கூடியவிதத்தில் மாற்றியமைக்கும் முயற்சியிலேயே எமது அரசு இறங்கியுள்ளது. எனவே ஜனாதிபதி பிரதமரின் வழிகாட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி நிம்மதியான வாழ்கையொன்றை உருவாக்க உங்கள் ஆதரவு என்றும் தேவை என கூறினார்.

LEAVE A REPLY