கோலி மட்டுமே எங்களது குறி கிடையாது: கெய்ல்

0
230

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல் ஆட்டத்தில் தோற்ற இந்திய அணி, அதைத் தொடர்ந்து சரிவில் இருந்து மீண்டு வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே உத்வேகம் அவர்களிடம் இருக்கும். எனவே அரைஇறுதிக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியின் வெற்றிக்கு குறிப்பிட்ட வீரரை மட்டும் அடையாளம் காட்டுவது கடினம்.

எல்லா திறமையும் கொண்ட அணியாக இந்தியா விளங்குகிறது. பீல்டிங்கிலும் அசத்துகிறார்கள். அதனால் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது எப்போதும் கடினம். ஆனால் நாங்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்க தயாராக இருக்கிறோம்.

விராட் கோலி தனி நபராக இரண்டு ஆட்டங்களில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்திருப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. உலகின் சிறந்த வீரராக விராட் கோலி உருவெடுப்பார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தேன். அது இன்று நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் விராட் கோலியை மட்டுமே நாங்கள் குறி வைத்து வியூகம் வகுக்கப் போவதில்லை.

இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் உள்ளனர். குறிப்பிட்ட நாள் சாதகமாக அமைந்தால், எந்த ஒரு வீரராலும் அதிரடியில் கலக்க முடியும்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது. அவர்களை போல் எங்கள் அணியிலும் பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இந்த தருணத்தில் விராட் கோலி தான் கவனிக்கத்தக்க வீரராக இருக்கிறார். எங்களுக்கு எதிராக அவரை ரன் குவிக்க விடாமல் தடுப்போம் என்று நம்புகிறோம்.

இவ்வாறு கெய்ல் கூறினார்.

LEAVE A REPLY