குறைந்த நிலப்பரப்புள்ள ஏறாவூர் பிரதேசத்தில் கிழக்கு மாகாணத்தின் சிறந்த விவசாயி தெரிவு

0
1310

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகக் குறைந்தளவு நிலப்பரப்பைக் கொண்டுள்ள ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலிருந்து கிழக்கு மாகாணத்தின் சிறந்த வர்த்தக ரீதியிலான பழச் செய்கை விவசாயி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த எஸ். அப்துல் காதர் என்பவர் விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீனின் விவசாய ரீதியிலான தொழினுட்ப ஆலோசனைகளுக்கமைவாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2 ஏக்கர் காணியில் குறுகிய கால பழச் செய்கையை மேற்கொண்டதன் காரணமாக அவர் கிழக்கு மாகாணத்தின் வர்த்தக ரீதியிலான பழச் செய்கையின் சிறந்த விவசாயி என முதலாமிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் விவசாயிகளிடையே நடத்திய சிறந்த விவசாயிகளுக்கான போட்டியில் இந்தத் தெரிவை மேற்கொண்டது.

கடந்த இரண்டு வருட காலத்தில் அவரது தோட்டத்திலிருந்து விழைந்த சிறந்த ரக பப்பாசிப் பழங்களின் மூலம் தனக்கு சுமார் 15 இலட்ச ரூபாய் இலாபம் கிட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வளமற்ற வெறும் வெம்பு மணலாகக் காணப்பட்ட இந்த நிலப்பரப்பில் இயற்கைப் பசளைகளையும் வளமான மண்ணையும் பயன்படுத்தி இந்த முயற்சியில் தான் வெற்றியடைந்துள்ளதாக சிறந்த பழச் செய்கை உற்பத்தியாளரான அப்துல் காதர் தெரிவித்தார்.

கூடவே, வாழை, பலா, மா, அன்னாசி, கொய்யா, முலாம் பழம் போன்றவற்றையும் இந்த விவசாயி மேற்கொண்டுள்ளார். நீண்ட காலப் பழமரங்களான இவற்றின் அறுவடையை தான் விரைவில் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிதார்.

உப உணவுப் பயிர்ச்செய்கையையும் அவர் தனது தோட்டத்தில் மேற்கொண்டுள்ளார். இவற்றுக்கு தூறல் நீர்ப்பாசனத்தின் மூலம் தான் நீர் பாய்ச்சுவதாகவும் அப்துல் காதர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY