ஒரு பில்லியன் ரூபா பெறுமதியுடைய தரக்குறைவான மருந்துகள் கடந்த 05 வருடங்களில் இலங்கைக்கு இறக்குமதி

0
186

ஒரு பில்லியன் ரூபா பெறுமதியுடைய தரக்குறைவான மருந்துகள் கடந்த 05 வருடங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையை பொது நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுக்குழு (கோப்) வெளிப்படுத்தியுள்ளது.

அரச மருதாக்கற் கூட்டுத்தாபனம் தற்போது கோப் குழுவின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்திணைக்களத்தை வந்தடையும் மருந்துகளின் தரம் மற்றும் அவற்றின் காலாவதி திகதியென்பன குறித்து சோதனையிடுவதற்கான எந்தவொரு விசேட பொறிமுறையையும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் கொண்டிருக்கவில்லை என்றும் கோப் குழுத்தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

“இது பாரதூரமான பிரச்சினையாகும். இறக்குமதி செய்யும் மருந்துகளின் குறைவான தரம் குறித்து நாட்கள் கடந்த பின்னரே அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அறிந்து கொள்கின்றது. மருந்துகளின் தரம் குறித்து பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்ததும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அதன் தரம் குறித்து சோதனையிட ஆரம்பிக்கின்றது.

அதற்கிடையில் குறித்த மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதுடன் பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படுகின்றன.” என்றும் ஹந்துநெத்தி எம். பி. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்தார்.

அத்துடன் மருந்து கொள்முதலில் பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதற்கு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்தக உற்பத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமையே காரணமென்றும் அவர் கூறினார்.

அரசு மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோக பிரிவு ஆகியவற்றுக்கிடையே முறையான தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததாலேயே அரச சுகாதார பாதுகாப்பு முறையில் பல விவகாரங்கள் எழுந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரச வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக பல வருடங்களாக மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கடந்த மாதமும் அரசாங்க வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவிய பெரும் எண்ணிக்கையான அவசர மருந்துகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY