புலிகள் ஆயுத பலத்தோடு இருக்கும்போது சமஸ்டி பற்றிப் பேசிய அரசியல் விற்பன்னர்கள் இப்பொழுது ஒற்றையாட்சி பற்றி எழுதத் துவங்கியிருக்கின்றார்கள்: சட்டத்தரணி காண்டீபன்

0
149

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

புலிகள் ஆயுத பலத்தோடு இருந்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தபோது சமஸ்டி பற்றிப் பேசிய அரசியல் விமர்சகர்கள் விற்பன்னர்கள் எல்லோரும் இப்பொழுது ஒற்றையாட்சிக்குக் கீழே 13வது திருத்தத்தைப் பற்றி அது நல்லது என்று எழுதத் துவங்கியிருக்கின்றார்கள். இதில் உலகறிந்த மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் அடங்கும் என சட்டத்தரணி என். காண்டீபன் தெரிவித்தார்.

“இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை பலப்படுத்தல்” எனும் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

ஞாயிறன்று 27.03.2016 பிற்பகல் மட்டக்களப்பு சின்ன உப்போடை, பறங்கியர் மன்ற  கேட்போர் கூடத்தில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு  தலைவர் எஸ். செந்தூரராஜா, தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி காண்டீபன் மேலும் கூறியதாவது,

உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இடம்பெற்ற ஆய்வுகள், கருத்தரங்குகளில் எல்லாம் சமஸ்டி அலகு பற்றி ஓங்கி ஒலித்துப் பிரச்சாரம் செய்த அரசியல் விற்பன்னர்கள் இப்பொழுது சமஸ்டியை அவர்களது அகராதியிலிருந்து அகற்றி விட்டு ஒற்றையாட்சி பற்றிப் பிரஸ்தாபிக்கின்றார்கள்.

கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு அரசியல் சார்ந்த உரிமையை நாங்கள் ஒரு நடைமுறைச் சாத்தியமான வழிகளில் எவ்வளவு தூரம் பிரயோகிக்கின்றோம் என்பதைப் பொறுத்தே இந்தக் கருத்துச் சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியும்” என்றார்.

இந்நிகழ்வில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு தலைவர் எஸ். செந்தூரராஜா, இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் கோப்ரி அழகரட்ணம், அக்டெட் நிறுவன மாவட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஏ. சிவலோகிதன், சொன்ட் நிறுவன நிருவாக மற்றும் நிதிப் பிரிவு அதிகாரி என். பிரவீனா, வெளிக்கள அலுவலர் ரீ. சிவநடராஜா, இணைப்பாளர் என். கிறைஷன், திட்ட அதிகாரி ரீ. விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் என். பிரியரஜனி, மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டோரும் தலைநகர மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY