வீட்டுத் திட்டம் என்ற பெயரில் மக்களை கடனாளியாக்கக் கூடாது; 550,000 ரூபாவில் வீடமைப்பது சாத்தியமற்றது: குமாரசாமி நாகேஸ்வரன்

0
164

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

2009ம் ஆண்டு செய்யப்பட்ட செலவீன மதிப்பீட்டுத் தொகையில் 7 வருடங்கள் கழிந்த பின்னரும் அந்த தொகையில் வீடொன்றை அமைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்கின்றார் சம்பூர் இடம் பெயர்ந்தோர் நலன்புரிச்சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான குமாரசாமி நாகேஸ்வரன்.

இதன் காரணமாகவே வீடுகளை பெறுவதற்கு தகுதியுடைய பயனாளிகள் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் இந்திய உதவி திட்ட வீடுகளை பெறுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது பற்றி மாகாண சபை உறுப்பினரிடம் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்நாட்டு போர் காரணமாக 10 வருடங்களுக்கு முன்பு பிரதேசத்திலிருந்து வெளியேறியிருந்த .சம்பூர் பிரதேச மக்கள் அண்மையில் தான் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்காலிக கொட்டில்களிலும் கூடாரங்களிலும் வாழ்கின்றனர்.

அதிகார பூர்வ தகவல்களின்படி இதுவரையில் 350 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. இந்த குடும்பங்களில் 204 குடும்பங்கள் இந்திய உதவி வீடுகளை பெறுவதற்கு தெரிவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

ஏற்கனவே சம்பூர் பிரதேசத்தின் அண்மித்த கிராமங்களான கூனித்தீவு, நவரட்ணபுரம், கடற்கரைச்சேனை, கட்டைப்பறிச்சான் போன்ற கிராமங்களில் இந்த உதவி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வீடுகளை அம் மக்கள் பெற்றிருந்தாலும் வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாத நிலையில் வீடு கிடைத்தும் கடனாளிகளாகவே தங்களின் வீடுகளை முடித்துள்ளவர்களாக அவர்களை தற்போது காண முடிகின்றது.

இப்படியான நிலை தங்களுக்கு வரக் கூடாது. வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கடன் இல்லாமல் இருந்தால் போதும் என்பதே சம்பூர் மக்களின் நிலைப்பாடாகும்

சம்பூர் பிரதேசத்திலிருந்து தெரிவான பயனாளிகள் தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பு, கட்டிட பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி மதிப்பீட்டுத் தொகையை ரூபா 7 இலட்சம் தொடக்கம் ரூபா 8 இலட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்

இதனை இந்திய வீடமைப்புக்கு பொறுப்பான நிறுவனம் மற்றும் சிவில் அதிகாரிகளின் கவனத்திற்கு மக்களால் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும் அவர்களால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது” என்றும் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இந்திய உதவி வீடொன்றை நிர்மாணிப்பதற்கு ரூபா 5 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

LEAVE A REPLY