கழுத்தின் முக்கியத்துவம்

0
176

ஒருவரின் வடிவத்தை நிர்ணயிப்பதில் கழுத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. கழுத்து நீண்ட பெண்கள் பொதுவாக உயரமாக இருப்பார்கள்.

முதுகெலும்பின் தொடக்க இடம் கழுத்துப் பகுதியில்தான் உள்ளது. முதுகெலும்பின் முதல் வலையத்தை ‘அட்லஸ்‘ என்று அழைக்கிறார்கள். உலகத்தை ‘அட்லஸ்‘ தாங்கி நிற்பதுபோல் இந்த வளையம் தலையை தாங்கி நிற்கிறது என்பதால் அப்படியொரு பெயர். ஆம், இல்லை என்று நாம் தலையாட்டும் போது மண்டை ஓடும் இந்த ‘அட்லஸ்‘ சேர்ந்துதான் அந்த அசைவை கொடுக்கின்றன.

குழந்தை வளர்ச்சியில் மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் ஆகும் போதுதான் தலை நிற்கும். அப்போதுதான் குழந்தையின் அப்பாவால் குழந்தையை பயமின்றி தூக்க முடியும். நான்கு மாதம் முடிந்த பின்னும் குழந்தையின் தலை நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தால் குழந்தையின் கழுத்து மண்டலத்தில் ஏதோ கோளாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எனவே, உடனே குழந்தைகள் நல டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. குழந்தைப் பருவத்தில் தலையை தூக்கிப் பார்க்கும்போது முதுகெலும்பின் மேல் கழுத்துப் பகுதியில் ஒருவித வளைவு ஏற்படத் தொடங்கும். பின்னர் குழந்தை உட்காரும்போது முதுகெலும்பின் கீழ்பகுதியில் மற்றொரு எதிர்திசை வளைவு ஏற்படுகிறது.

கருவாக இருக்கும்போது குழந்தையின் முதுகெலும்பு ஆங்கில எழுத்தான ‘சி‘ வடிவில் இருக்கும். அதன்பிறகு முதுகெலும்பு தொடர் நேராகி அதற்கு பிறகு அதிக வளைவு இல்லாத ‘எஸ்‘ எழுத்து வடிவத்தை அடைகிறது. எலும்பு மட்டுமல்லாமல் அதைச்சுற்றியுள்ள தசைகளும் இந்த வடிவத்துக்கு காரணமாக அமைகின்றன.

மண்டை ஓட்டையும் அதனுள் இருக்கும் மூளையையும் தாங்கிப் பிடிப்பது கழுத்தில் உள்ள எலும்புகள்தான். அதாவது முதுகெலும்பின் ஆரம்பப்பகுதி இப்படி மூளைப்பகுதியை தாங்கிப் பிடிப்பதோடு, தண்டுவடத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவதும் முதுகெலும்பு தொடர்தான். மண்டை ஓட்டை விட முதுகெலும்பின் வேலை மிக நுட்பமானது, சவாலானது.

மண்டை ஓடு அசைவது இல்லை. குழந்தைப் பிறக்கும்போது மட்டுமே கொஞ்சம் அசைந்து கொடுத்து பிரசவத்தை எளிதாக்குகிறது. இதைத்தவிர மண்டை ஓட்டின் ஒரு பகுதி அசைகிறதென்றால், அது கீழ்த்தாடை மட்டுமே. எனவே தன்னை பாதுகாத்துக் கொண்டு, மூளையையும் பாதுகாப்பது மண்டை ஓட்டுக்கு சவாலான காரியம் இல்லை. ஆனால், தண்டுவடம் தொடர்ந்து அசையும் பகுதி. அதைச் சுற்றிச் செல்லும் முதுகெலும்பு உறுதியானதாகவும் இருக்க வேண்டும்.

அதேசமயம் நாம் பல்வேறு வேலைகளை செய்ய வசதியாக நன்கு நெகிழ்ந்து கொடுக்க வேண்டும். நாம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு முதுகெலும்பும், தண்டுவடமும் உறுதியான கழுத்தும் வேண்டும்.

LEAVE A REPLY