20 ஓவர் உலக கிண்ணம்: வெளியேறியது இந்திய அணி

0
625

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசிடம் தோற்று வெளியேறியது.

பெண்களுக்கான 5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மொகாலியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

இந்த மோதலில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற சூழலில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் டாஸ் ஜெயித்து முதலில் எதிரணியை பேட் செய்ய பணித்தார். இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 47 ரன்களும் (45 பந்து, 5 பவுண்டரி), டியாந்திர டோட்டின் 45 ரன்களும் (40 பந்து, 5 பவுண்டரி) சேர்த்தனர். மற்ற யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. இந்திய தரப்பில் ஹர்மன்பிரீத் கவுர் 4 விக்கெட்டுகளும், அனுஜா பட்டீல் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய இந்தியாவுக்கு முதல் பந்தே பேரிடியாக இருந்தது. கேப்டன் மிதாலி ராஜ் ‘கேட்ச்’ ஆனார். இதன் பிறகு சீரான இடைவெளியில் இந்தியாவுக்கு விக்கெட்டுகள் விழுந்தன. அனுஜா பட்டீல் 26 ரன்களிலும், கோஸ்வாமி 25 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் டோட்டின் வீசினார்.

இந்த ஆட்டத்தை கேலரியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பெண்கள் அணியை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தனர். ஆனால் கடைசி ஓவரில் இந்தியாவுக்கு ‘கனி’ கனியவில்லை. திரிலிங்கான கடைசி ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 6 ரன்களே எடுத்தது. அதாவது 20 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவிய இந்திய அணி போட்டியை விட்டு வெளியேறியது. பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக முத்திரை பதித்த டோட்டின் ஆட்டநாயகி விருதை பெற்றார்.

இதே பிரிவில் சென்னை சேப்பாக்கத்தில் இரவில் அரங்கேறிய கடைசி லீக்கில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் சார்லோட் எர்வர்ட்ஸ் 77 ரன்கள் (61 பந்து, 10 பவுண்டரி) குவித்து களத்தில் இருந்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 17.5 ஓவர்களில் 80 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து 68 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்தது.

‘பி’ பிரிவில் இங்கிலாந்து (4 வெற்றியுடன் 8 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (3 வெற்றியுடன் 6 புள்ளி) அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் (4 புள்ளி), இந்தியா (2 புள்ளி), வங்காளதேசம் (4 ஆட்டத்திலும் தோல்வி) ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின. ‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து (8 புள்ளி), ஆஸ்திரேலியா (6 புள்ளி) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன.

LEAVE A REPLY