கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை 24 மணி நேரமும் உஷார் நிலையில்!

0
263

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் இடம்பெறக்கூடிய தீ அனர்த்தங்களின்போது அவற்றை துரிதமாக கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருப்பதாக மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை தீயணைப்பு படையினரின் விசேட பயிற்சி ஒத்திகை நிகழ்வு ஒன்று மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பரின் ஆலோசனையின் பேரில் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது;

“தீயணைப்பு படையினர் எந்த நேரத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டியவர்கள். தீ விபத்து சம்பவங்களின்போது தமது உயிரை துச்சமென நினைத்து, மிகவும் அர்ப்பணிப்புடன் தீயுடன் போராடி அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்துள்ளனர்.

அந்த வகையில் எமது கல்முனை மாநகர சபையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள தீயணைப்பு படைப் பிரிவு ஒரு வருடத்திலேயே தேவையான பயிற்சிகளை பெற்று, தம்மை தீ அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் தம்மை தயார்படுத்தியுள்ளது.

கல்முனை மாநகர சபைப் பிராந்தியத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் (15) பதினைந்திற்கு மேற்பட்ட தீ அனர்த்தங்கள் ஏற்பட்ட போதிலும் எமது தீயணைப்பு படையினர் அவற்றை மிகவும் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாரிய அழிவுகளில் இருந்து இப்பகுதியை பாதுகாத்துள்ளனர்.

அதேவேளை அவர்களுக்கு மேலும் பயிற்சிகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, அப்பிரிவை இன்னும் பலப்படுத்துவதற்கு எமது மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் அவர்களும் கலந்து கொண்டார்.

KMC FB 27032016 (1) KMC FB 27032016 (4) KMC FB 27032016 (5) KMC FB 27032016 (7) KMC FB 27032016 (10)

LEAVE A REPLY