இஸ்லாமிய வங்கி முறைமைகளுக்கு எதிராக இனவாதிகள் கோஷமிடுவதை தடை செய்க: நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்

0
141

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை முழுமையாக….

*பொருளாதார பிரச்சினையை சரிசெய்ய கட்சி பேதங்கைளை மறந்து ஒன்றினைவோம்

*அரசு மக்கள் மீது அதிக சுமைகளை சுமத்துவதை நிறுத்துக!

*இஸ்லாமிய வங்கி முறைமைகள் சட்டரீதியானது. அதற்கு எதிராக கோஷமிடுவதை தடை செய்க

*சகல சமூகங்களும் அவர்களுடைய மார்க்கம் அனுமதித்த வகையில் அவர்களுடைய வியாபாரத்தை செய்வதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

*இனவாத  இனரீதியான செயற்பாடுகளுக்கு இனியும் இடமளிக்க முடியாது.

*மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும்

*இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அனுமதிக்கமாட்டோம்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை தொடர்பில் இடம்பெறும் ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பாக கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார பின்தங்கிய நிலை, பொருட்களின் விலை அதிகரிப்பு, முதலீட்டாளர்களுடைய வருகை குறைவு போன்ற பல காரணங்களால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை இன்று நாம் எதிர்நோக்கியிருக்கின்றோம்.

இந்நிலை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஊடாக ஏற்பட்டுள்ளதாக சிலர் கணிக்கலாம். எனினும், ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற விடத்து அந்த அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் வரை இவ்வாரான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவது வழக்கமாகும். வெளிநாடுகளுக்கு இலங்கை மீதான நம்பிக்கை  முதலீட்டாளர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் வரை இந்நிலை தொடரும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்நாட்டில் முதலீடுகளை தவிர்த்துக் கொண்டதனால் பல்வேறுபட்ட பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம். ஆகவே இப்பிரச்சினையை சரி செய்ய எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற வேறுபாடுகளை மறந்து முன்னைய ஆட்சியை குறை கூறிக்கொண்டிருப்பதை விட்டு விட்டு மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், மக்கள் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மீளும் வகையில், குறிப்பாக அத்தியவசிய உணவுப் பொருட்களை மிகக்குறைந்த விலையில் பெருகின்ற விதத்தில் எங்களுடைய பொருளதாரக் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

கடந்த வாரம் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக பானின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், தோட்டத் தொழிலாளர்களும் அப்பாவி மக்களும் பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

மக்களை வேறு உணவு வகைகளுக்கு மாற்ற வேண்டும் என்ற கொள்கையை நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டுமே தவர குறிப்பிட்ட காலத்துக்குள் அதை செய்ய முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, மக்கள் மீது அதிக சுமைகளை சுமத்துவதை நிறுத்தி மக்களுக்கான வசதிகளை வழங்குகின்ற வகையிலே அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முஸ்லிம்களுக்கும் அதிக பங்குள்ளமை அனைவருக்கும் தெரியும். முஸ்லிம்கள் தங்களுடைய பொருளாதார முறைமைகளை வங்கிகளின் ஊடாக மேற்கொள்ளும் வகையில் தங்களுடைய வியாபாரத்தை இஸ்லாமிய சட்ட வரையறைக்குள் செய்து கொள்ளும் வகையிலான வங்கி நடவடிக்கைகள் அமையப்பெற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாளாக முன்வைத்து வந்தனர்.

அந்த அடிப்படையில் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கி சட்ட திருத்த மூலம் 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது. இச்சந்தர்பத்தில் இஸ்லாமிய வங்கி முறைமை நாடாளுமன்றத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் இன்று அது சட்டமாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் இந்நாட்டில் இஸ்லாமிய வங்கி முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கமைய 2011ஆம் ஆண்டு அமானா வங்கி என்ற இஸ்லாமிய அடிப்படையிலான புதிய வங்கி ஆரம்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கெமேர்ஷல் வங்கி, ஹெற்றன் நெஷனல் வங்கி உட்பட இந்தநாட்டில் இருக்கின்ற பொரும்பாலான வங்கிகள் மற்றும் லீசிங் கம்பனிகள் இஸ்லாமிய நடைமுறையிலான  வங்கிச் சேவைகளை ஆரம்பித்திருக்கின்றன.

இன்று அந்த வங்கிகள் ஊடாக தங்களுடைய மார்க்கத்துக்கு கட்டுப்பட்ட வகையிலே முஸ்லிம்களும் சேவைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவற்றை நிறுத்த  வேண்டும் என்று இன்று சில குழுக்கள் கோஷமிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு சமூகத்துக்கு இருக்கின்ற அதுவும் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டிருக்கின்ற ஒரு விடயத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் அண்மையில் மத்திய வங்கிக்கு முன்னாலும் மற்றும் பல இடங்களுக்கு சென்று கோஷமிட்டதை நாங்கள் அறிவோம்.

ஆகவே, நாங்கள் இவற்றின் மீது மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சகல சமூகங்களும் அவர்களுடைய மார்க்க அனுமதித்த வகையில் அவர்களுடைய வியாபாரத்தை செய்வதற்கான சூழ்நிலைகள் நாட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நாடு முன்னேற்றமடைய முடியும்.

இனவாத  இனரீதியான சிந்தனைகளால் இந்நாடு குட்டிச் சுவராகியுள்ளது. இந்நாட்டிலே 30 ஆண்டுகள் கொடிய யுத்தம் நிலவியது. இன்று மீண்டும் நாங்கள் எல்லோரும் ஒன்றினைந்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.

அன்று அமெரிக்க சமூகம், ஐரோப்பிய சமூகம் உட்பட சர்வதேச சமூகம் நமது நாட்டை ஓர் எதிரி நாடாக பார்த்தது. இன்று அந்நிலைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமயிலான அரசில் மாற்றப்பட்டுள்ளது. நாம் சர்வதேச நாடுகளுடன் நட்பை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

அந்நாடுகளின் ஒத்துழைப்புடன் நாம் எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். வடக்கு, கிழக்கிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்களுடைய சொந்த பிரதேசங்களில் குடியமர்த்தி, அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு தேவையான பணிகளில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வருமானத்தை அதிகரித்து, அவர்களுடைய வறுமையை போக்கி, அவர்களும் பொருளாதாரத்திலே பங்கெடுக்கின்ற ஒரு சமூகமாக மாற்றுவதற்கு நாம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எனினும், சில தீவிரவாக குழுக்கள் இனங்களுக்கு எதிராக சமூகளுக்கு எதிராக செயற்பட்டு மீண்டும் இந்நாட்டிலே இன ரீதியான ஒரு முறுகல் நிலையை உருவாக்குவற்கு முயற்சிக்கின்றன.

மீண்டும் இந்நாட்டைக் குட்டிச் சுவராக்குவதற்கு சிலர் முனைகின்றனர். இவ்வாரான சில குழுக்களின் நடவடிக்கைகளினால் தான் கடந்த அரசாங்கத்தை சிறுபான்மை சமூகம் தூக்கியெறிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆகவே, நாங்கள் இது தொடர்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவ்வாரான குழுக்களுக்கு இந்நாடாளுமன்றமும் இந்த அரசாங்கமும் இடமளிக்கக் கூடாது  என அரசிடம் வலியுறுத்துகிறேன்.

பொருளாதரத்தை கட்டியெழுப்புவது என்பது வெறுமனே அரசாங்கத்தால் மட்டும் முடியாது. எதிர்கட்சிகளும் அதற்கு ஆதரவு அழிக்க வேண்டும். பொருளாதாரம் என்பது இந்நாட்டிற்குரிய ஒரு விடயம். அது இந்நாட்டிலே வாழ்கின்ற மக்களுடைய வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஒரு விடயம்.

ஆகவே, எதிர்கட்சிகள் எதிர்த்து கோஷமிடுகின்ற போது சில நேரங்களில் முதலீட்டாளர்கள் எமது நாட்டிலே முதலீடு செய்ய தயங்குவார்கள். இதனால் இந்நாட்டினுடைய பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும். ஆகவே, தயவு செய்து அரசியலுக்கு அப்பால் நாங்கள் எல்லோரும் இந்நாட்டினுடைய பொருளாதாரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

தாய் நாட்டினுடை பொருளாதாரம் என்பது ஒவ்வொரு குடும்பத்தினதும் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.

ஆகவே, அந்த அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்றினைகின்ற போது மாத்திரம் மாத்திரமே எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். இன்று நாம் எல்லோரும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெற வேண்டும்.

நாட்டிலே நிறுத்தப்பட்டடிருக்கின்ற அபிவிருத்திப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். சர்வதேச முதலீட்டாளர்கள் எமது நாட்டுக்கு வந்து முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புக்களையும் வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இந்த நாட்டிலே உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவதனூடாக, நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். இன்று தேசிய ரீதியில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியிலும் பொருளாதாரம் நலிவடைந்திருக்கின்றது.

இன்று பல அறபு நாடுகளில், இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை, சர்வதேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை, எங்களுடைய நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிரதான உற்பத்திப் பொருளான தேயிலைக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை எனப் பல பிரச்சினைகளால், பொருளாதாரம் நலிவடைந்திருக்கின்றது.

ஆகவே, இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் 30 ஆண்டுகள் யுத்தத்தில் சிக்கி சின்னாபின்னப்பட்ட நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் முதலில் எங்களுக்கு இடையில் இருக்கின்ற வேறுபாடுகளை மறக்க வேண்டும். இந்நாட்டிலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 15 மாதங்களாகின்றன.

தொடர்ந்தும் நாங்கள் கடந்த ஆட்சியின் குறைகளையும் பிரச்சினைகளையும் சொல்லிக் கொண்டிருந்தால் எம்மால் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

யுத்தத்திலே எமது பிரதேச மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக வடக்கு கிழக்கிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விதவைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய குடும்பத்தை நடத்த முடியாதுள்ளனர். தங்களுடை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் இருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாது, ஆகக்குறைந்தது அடிப்படை வசதியான மலசலகூட வசதி கூட இன்றி வடகிழக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றார்கள். மலசலகூடத்தை கூட கட்டிக்கொள்ள முடியாமல் அங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஆகவே, நாங்கள் எங்களுடைய அமைச்சு மூலம் அவர்களுக்கான பல்வேறுபட்ட திட்டங்களை முன்வைத்திருக்கின்றோம்.

குறிப்பாக யுத்தத்திலே பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தொழில் பயிற்சியளித்து தொழில் வாய்ப்புக்களை வழங்குவதனூடாக அவர்களுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பல வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றோம்.

நாங்கள் இவ்வாரான செயற்பாடுகளைச் செய்வதற்கு ஒன்றுபட வேண்டும். இனவாத அடிப்படையில் சிந்திப்பதை முதலில் நாங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். “இது எனது நாடு, இது எனது தாய்ப் பூமி” என்கின்ற உணர்வோடு ஒவ்வொருவரும் சிந்திக்கும் நிலைமை ஏற்பட வேண்டும். நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

அந்தவகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும். எந்தவகையிலும் இந்த நாடு பிரிய முடியாது. வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்படுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆனால், அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடக சகல சமூகங்களும் தங்களுடைய அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு இந்த மண்ணிலே வாழ்வதற்காக சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இன்று இந்நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் மிகச்சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று சிலர் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பி இனங்களுக்கு இடையில் மீண்டும் பிரச்சினைகளை உண்டுபண்ண விரும்புகிறார்கள். இந்த நாடு பொருளாதார ரீதியிலே முன்னேற்றமடைய வேண்டுமாகவிருந்தால் இந்தநாட்டிலே இருக்கின்ற மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.

ஆகவே, நாங்கள் வடக்கை கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இன்று இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அரசிலமைப்பு சபை உருவாக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் அனைவரினதும் பிரதிநித்துவம் பாதுகாக்கப்படக்கூடிய வகையில், அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில், இந்த சபையில் அவர்களுடைய பிரதிநித்துவம் விகிதாசார அடிப்படையில் இடம்பெறக்கூடிய வகையில், இனங்களுக்கிடையிலான கசப்புணர்வு ஏற்படாத வகையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லோரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.

LEAVE A REPLY