அரையிறுதிக்குள் நுழைவது யார்? இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

0
143

டி20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்கான லீக் போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. மொகாலியில் நடக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.

குரூப்2 பிரிவில் இடம்பெற்றுள்ள் இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கிறது.

ஏற்கனவே நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

அதேசமயம் இதில் தோற்கும் அணி உலகக்கிண்ண தொடரை விட்டே வெளியேறிவிடும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய அணி:

உலகக்கிண்ண தொடருக்கு முன் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் உலகக்கிண்ண தொடரில் அந்த அணியின் செயல்பாடு மெச்சும் அளவுக்கு இல்லை. குறிப்பாக துடுப்பாட்டம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.

இந்திய அணி விராட் கோஹ்லியை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் காணப்படுகிறது. அவரை தவிர வேறு யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை.

மேலும், தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் நிலைத்து நின்று அதிரடியான தொடக்கம் தர வேண்டியது அணிக்கு அவசியமாகும்.

யுவராஜ் சிங், அணித்தலைவர் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் அதிரடியால் ஓட்டங்களை குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள்.

பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் அஸ்வின், பும்ரா, ஜடேஜா, பாண்ட்யா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பகுதிநேரமாக ரெய்னாவும் சிறப்பாக வீசுகிறார். யுவராஜ் சிங்கிற்கும் வாய்ப்பளிக்கலாம்.

அவுஸ்திரேலிய அணி:

அவுஸ்திரேலிய அணி எப்போதும் முக்கியமான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். அந்த அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் வலுவான அணியாக உள்ளது.

அவுஸ்திரேலியா இதுவரை டி20 உலகக்கிண்ணத்தை வென்றது கிடையாது. அதனால் முதன்முறையாக டி20 உலகக்கிண்ணத்தை வசப்படுத்தி விட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது.

இதனால் இந்திய அணிக்கு அவுஸ்திரேலியாவை சமாளிப்பது என்பது சவாலாக இருக்கப் போகிறது.

ஆடுகளம்:-

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி ஆடுகளத்தில் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமானது.

இங்கு இதுவரை நடந்துள்ள 3 டி20 போட்டிகளில் குறைந்தது 155 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 211 ஓட்டங்களை வெற்றிகரமாக எட்டியது அதிகபட்சமாகும். இங்கு இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY