வடகொரியாவில் உளவு வேலை பார்த்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்கர்

0
159

தென் கொரிய அதிகாரிகளுடன் சேர்ந்து வடகொரியாவில் உளவு வேலை பார்த்ததாக மேலும் ஒரு அமெரிக்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்ப்பதாக, அமெரிக்க குடிமக்களை வடகொரியா கைது செய்து வருகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 21 வயதான ஓட்டோ வாம்பையர் என்ற அமெரிக்கர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு சமீபத்தில் வடகொரியா 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட கிம் டாங் சுல் என்ற அமெரிக்க தொழிலதிபர், மன்னிக்க முடியாத உளவு வேலையில் ஈடுபட்டதாக வடகொரியா குற்றம் சாட்டியது. அவரிடம் இருந்து வடகொரிய அணு உலைகள் மற்றும் ராணுவம் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வடகொரியாவின் நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கிம் டாங் சுல் (வயது 62) தனது குற்றத்தை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

பியாங்யாங்கில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவரை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கிம் டாங் சுல், தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து உளவு வேலை பார்த்ததை ஒப்புக் கொண்டதாகவும், தன்னை மன்னித்துவிடும்படியும் கூறியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதனால் அவருக்கும் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கலாம் எனத் தெரிகிறது.

வடகொரியா தனது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்துவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY