சம்பூரில் காணிகள் முற்றாக விடுவிப்பு

0
127

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் கடற்படை முகாம் இருந்த 177 ஏக்கர் காணியில் இரண்டாம் கட்டம் நேற்று(25) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

546 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகளே நேற்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான க. துரைரெட்ணசிங்கம், அப்துல்லா மஃருப், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான துரைராசசிங்கம், சி. தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த காணிக்குள் சம்பூர் மகா வித்தியாலயம், ஸ்ரீ முருகன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் விநாயகர் ஆலயம், விவசாய சம்மேளனக் கட்டடம் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடம் நூல் நிலையம், மூதூர் பிரதேச சபை உப அலுவலகம் போன்ற பல பொது கட்டடங்களும் 546 குடும்பங்களுக்கு சொந்தமான குடியிருப்பு காணிகளும் நேற்று விடுவிக்கப்பட்டன.

சம்பூரில் கடற்படை முகாமுக்கென சுவீகரிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, இந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனை செவிமடுத்த அரசாங்கம் கடற்படை முகாமை வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கும், காணிகளைக் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கும் முடிவு செய்து அறிவித்தது.

இதற்கமைய, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியன்று சம்பூருக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 818 ஏக்கர் காணிகளை விடுவித்தார். இரண்டாம் கட்டமாகவே நேற்று காணிகள் விடுவிக்கப்பட்டன. கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் 1055 ஏக்கர் காணிகள் இருந்தன. இவற்றில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 818 ஏக்கரைவிட மிகுதியாக இருந்த 177 ஏக்கர் காணிகளே நேற்று பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

அரசாங்கம் உறுதியளித்தற்கமைய கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சகல காணிகளும் நேற்றுடன் விடுவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY