எல்லா மதத்தினரும் சமஉரிமையுடன் வாழும் நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும்: பிலாவல் பூட்டோ

0
183

இந்தியாவுக்கு ஒரு முஸ்லிமால் ஜனாதிபதியாக முடியும் என்றால் பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு ஏன் வரக்கூடாது? என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையின இந்து மக்கள் அதிகமாக வாழும் உமர்கோட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஒரேமகனான பிலாவல் பூட்டோ கலந்து கொண்டார்.

அவருக்கு ராஜஸ்தானி தலைப்பாகையை அணிவித்த இந்து மக்கள், அவர்மீது வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரும் கூடியிருந்த மக்களின்மீது வண்ணப்பொடிகளை தூவி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, பிலாவல் பூட்டோ பேசியதாவது:-

தனிமனிதரின் மதஉரிமை மற்றும் வழிபாட்டு உரிமையில் அரசு தலையீடு இருக்கவே கூடாது என்பதே பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் கனவாக இருந்தது. முஸ்லிம்களுக்கான பாகிஸ்தான், சிறுபான்மையின மக்களுக்கான பாகிஸ்தான் என இருவேறு நாடுகள் இருக்கவே முடியாது. ஆண்களுக்கான பாகிஸ்தான், பெண்களுக்கான பாகிஸ்தான் எனவும் இருவேறு நாடுகள் இருக்க முடியாது.

முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத சிறுபான்மையினத்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், கூலி தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், நில உரிமையாளர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு தகுதியுடன் வாழும் ஒருநாடாக பாகிஸ்தான் இருக்கக் கூடாது. எல்லா மதங்களை சேர்ந்த மக்களும் சமஉரிமையுடன் வாழும் நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும்.

இந்தியாவுக்கு ஒரு முஸ்லிமால் ஜனாதிபதியாக முடியும் என்றால் பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் இந்த நாட்டு அரசின் உயர்ந்த பதவிகளுக்கு ஏன் வரக்கூடாது? மதங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் இங்குள்ள எல்லா மக்களும் சம உரிமையுடன் வாழும் நாடாக பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY