பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இன்று மோதல்

0
314

6-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு முக்கியமான லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

குரூப்2 சுற்றில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன் மொகாலியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகிறது.

வங்காளதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு அதன் பிறகு இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் மண்ணை கவ்வியதால் அரைஇறுதி வாய்ப்பு மங்கிபோய் விட்டது. ஆனாலும் பாகிஸ்தானுக்கு நூலிழையில் இன்னும் அரைஇறுதி வாய்ப்பு ஒட்டிக்கொண்டிருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக்கில் இந்தியாவை வீழ்த்த வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்-ரேட் அடிப்படையில் ஒரு அணி அரைஇறுதிக்கு தேர்வாகும்.

ரன்ரேட்டில் பாகிஸ்தான் சிறந்த நிலையில் இருப்பதால் இவை எல்லாம் சாதகமாக அமைந்தால் பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இந்த உலக கோப்பையுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடிக்கு இதுவே கடைசி ஆட்டமாக அமையவும் வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கும் இது கட்டாயம் வென்றாக வேண்டிய ஆட்டமாகும். அதிகமான அதிரடி வீரர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மிகுந்த நம்பிக்கையுடன் ஆயுத்தமாகியுள்ளது. ஆரோன் பிஞ்சுக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா, பாகிஸ்தானில் பிறந்தவர். அவர் முதல் முறையாக தனது சொந்த அணியை எதிர்கொள்ள இருப்பது சுவாரயஸ்மான ஒரு அம்சமாகும். இவ்விரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5-ல் ஆஸ்திரேலியாவும், 7-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆகியுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: வாட்சன், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஜேம்ஸ் பவுல்க்னெர், பீட்டர் நெவில், ஜான் ஹேஸ்டிங்ஸ், நாதன் கவுல்டர்-நிலே, ஆடம் ஜம்பா.

பாகிஸ்தான்: ஷர்ஜீல் கான், அகமது ஷேசாத், காலித் லத்திப், உமர் அக்மல், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது, அப்ரிடி (கேப்டன்), இமாத் வாசிம், முகமது இர்பான் அல்லது வஹாப் ரியாஸ், முகமது சமி, முகமது அமிர்.

LEAVE A REPLY