நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கிடைத்தும் பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டோம்: அப்ரிடி

0
172

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட்டில் மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்து 3-வது வெற்றியுடன் முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் மார்ட்டின் கப்திலின் (80 ரன்,) அதிரடி உதவியுடன் நியூசிலாந்து நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியால் 5 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுக்க முடிந்தது.

தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறுகையில், ‘ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 200 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் எங்களது பவுலர்கள் கொஞ்சம் கட்டுப்படுத்தி விட்டனர். இது ‘சேசிங்’ செய்யக்கூடிய இலக்கு போன்றே தெரிந்தது. முதல் 6 ஓவர்களுக்கு (66 ரன்) பிறகு நாங்கள் நன்றாக விளையாடவில்லை.

பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்ட முயற்சித்திருக்க வேண்டும். நிறைய பந்துகளை வீணடித்து விட்டோம். அகமது ஷேசாத்தும் (32 பந்தில் 30 ரன்), ஷர்ஜீல்கானும் (25 பந்தில் 47 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.

ஆனால் அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி விட்டோம். இன்னும் தொடர்ந்து ஒரே மாதிரியான தவறுகளை செய்கிறோம்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் தவறுகளை இழைக்கிறோம். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போன்று தவறுகளை செய்தால் மீள்வது கடினம். கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை (மார்ச் 25) சந்திக்கிறோம். தோல்வியை மறந்து விட்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனது வாழ்க்கையில் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இது இருக்கலாம்’ என்றார்.

பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கூறும் போது, ‘சிறந்த தொடக்கம் கிடைத்தும், 8 முதல் 15 ஓவர்கள் வரை எங்களது பிடி (ரன்ரேட் குறைந்தது) தளர்ந்து போய்விட்டது. மிடில் ஓவர்களில் பவுண்டரி அடிப்பதற்கான வழிமுறைகளை எங்களது பேட்ஸ்மேன்கள் கண்டறிய தவறி விட்டதாக நினைக்கிறேன். இதுவே தோல்விக்கு முக்கிய காரணம். ’ என்றார்.

LEAVE A REPLY