ஆசிரியர்களை கண்ணியப்படுத்தும் மாணவர் சமுதாயம் எதிலுமே தோற்றுவிடாது கலைமகள் வித்தியாலய பிரதி அதிபர் என். ராஜதுரை

0
197

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து அவர்களை கண்ணியப்படுத்தும் மாணவர் சமூகம் எந்த விடயத்திலும் தோற்றுப்போய் விடாது என மட்டக்களப்பு, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலய பிரதி அதிபர் என். ராஜதுரை தெரிவித்தார்.

ஆசிரியர் சேவையில் அவரது 26 வருட நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக கலைமகள் வித்தியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கு கல்விக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றும்போது அவர் மேலும் கூறியதாவது,

ஒரு மாணாக்கருக்கு சிறந்த ஆசியர் கிடைப்பதென்பது ஒரு கொடையாகும் அதுபோல ஒரு ஆசிரியருக்கு சிறந்த மாணாக்கர்கள் கிடைப்பதென்பதுவும் ஒரு நற்பேறாகும்.

சிறந்த ஆசிரியர்களால் சிறந்த மாணவர் சமூகத்தை உருவாக்க முடியும். சிறந்த மாணவர் சமூகத்தால் ஒரு நாட்டின் சிறந்த எதிர்காலத்தையே உருவாக்க முடியும்.

ஆசிரியர்கள் வெறும் கற்பித்தலுக்காக மட்டும் பாடசாலைகளில் தங்களது நேரத்தைச் செலவிடவில்லை. அத்தோடு சேர்த்து அவர்கள் தங்களது உடல் பொருள் என்பனவற்றுடன் உயிரோட்டமான சிந்தனைகளையும் உயர்ந்த எதிர்பார்ப்புக்களையும் அர்ப்பணிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஆசிரியர் சமூகத்தை மாணவர்கள் உயரும் படிக்கற்களாகப் பாவித்து தங்களது திறமைகளை வெளிக்காட்டி புகழின் உச்சத்திற்குச் செல்ல வேண்டும்.

காலஞ்சென்ற ஜனாதிபதி ஆர். பிறேமதாஸ அவர்கள் வறியவர்களின் உற்ற தோழனாக இருந்து வறிய மாணவர்களின் கல்விக்கு உயிர் கொடுத்தார். அவர் ஒரே தடவையில் 35 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கினார். இந்த ஆசிரியர் ஜனசக்தி உதவி பெறும் வறிய குடும்பங்களிலிருந்தே தெரிவ செய்யப்பட்டிருந்தார்கள்.

அதன் மூலம்தான் நானும் இந்த ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு இப்பொழுது 26 வருடங்களை நிறைவு செய்து பிரதி அதிபர் என்ற தரத்தை அடைந்திருக்கின்றேன்.

கல்விக்கு உயிர்கொடுத்தோர் மரணிப்பதில்லை என்பார்கள். அதனால்தான் இன்று நான் எத்தனையோ மாணவர்களை உருவாக்கவும் அவர்களுக்கு என்னால் உதவவும் முடிந்திருக்கின்றது.

பிறேமதாஸா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும் கல்விக்கு உயிர்கொடுத்த அவரது உயரிய சிந்தனைகள் இன்றும் உயிர்வாழ்கின்றன.

இதனைப் போன்றே நீங்களும் எதிர்காலத்தில் குருபக்தியுள்ள மாணவர்களாய்த் திகழ்ந்து இந்த உலகில் புகழ் பரப்ப வேண்டும்.

உங்கள் ஒவ்வொருவர் மூலமும் எதிர்காலத்தில் எத்தனையோ பேர் நன்மையடைய வேண்டும்.

இந்தப் பாடசாலையிலேயே தங்களது வாழ்வை அர்ப்பணித்த முன்னாள் அதிபரான ராஜேந்திரா அதிபரும் ஆசிரியையான அவரது துணைவியாரும் நம் கண்முன்னே இருக்கும் சிறந்த உதாரணங்கள்.

இந்நிகழ்வில் 120 மாணவர்களுக்கு ஆங்கில அகராதியும், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

பாடசாலை சிரேஸ்ட ஆசிரியர் ஆர். சுரேந்திரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்; இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY