வங்காளதேசத்திற்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

0
174

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், சூப்பர்-10 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

சூப்பர்-10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் இந்திய அணி குரூப்2-ல் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்த பிறகே சற்று நிம்மதி அடைந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக்கில் இன்று வங்காளதேச அணியுடன் மோதுகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டும். அப்போதுதான் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்காளதேச அணியில் தமீம் இக்பால் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், தவானும் நிதானமாக ஆடினார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது. 6 ஓவரில் ரோகித்தும், தவானும் ஆளுக்கு ஒரு சிக்சர் அடிக்க ஆட்டத்தில் சூடு பிடித்தது. ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் தேவையில்லாத ஒரு ஷாட்டை ஆடி ரோகித் சர்மா அவுட் ஆனார்.

விக்கெட் விழுந்த பிறகு பொறுப்பாக ஆட வேண்டிய தவான் அடுத்த ஓவரிலேயே அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனை அடுத்து களமிறங்கிய கோலியும், ரெய்னாவும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இதனால் இந்திய அணி 11 ஓவர் முடிவில் 73 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தியாவின் முதுகெலும்பான வீராட் கோலியும் வேகமாக ரன் குவிக்க திணறினார். 24 ரன்கள் எடுத்திருந்த கோலி சிக்ஸ் அடிக்க முயன்று போல்டானார். இதனை அடுத்து யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பாண்டியா களமிறங்கினார். பாண்டியா 7 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் இரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிவந்த ரெய்னாவும் புல் ஷாட் ஆட முயன்று 30 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய யுவராஜ் 3 ரன்களில் ஆட்டமிழக்கவும் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. தோனியும், ஜடேஜாவும் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கவனமாக ஆடியதால் இந்தியாவின் ஸ்கோர் சரிந்தது.

19-வது ஓவரில் ஜடேஜா இரண்டு பவுண்டரி அடிக்க மீண்டும் இந்திய அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது. ஆனால் 20-வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா போல்டானார். தோனியாலும் அதிரடியாக ஆடி ரன் குவிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வாங்காளதேசம் களமிறங்கவுள்ளது.

LEAVE A REPLY