விமான நிலையத்தில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை: பெல்ஜியம் அரசு

0
153

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியத்தை சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தியை பெல்ஜியம் அரசு மறுத்துள்ளது.

இது குறித்து பெல்ஜியம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை. அவனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து இன்று நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, விமான நிலையத்துக்கு ஒரு டாக்சியில் வந்த மூன்று தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து தங்கள் கையில் இருந்த சூட்கேஸ்களை வெவ்வேறு ‘டிராலி’களில் வைத்து புறப்பாட்டு பகுதியின் வரவேற்பு கூடத்துக்கு தள்ளிச் சென்றனர். கையுறை அணிந்திருந்த அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த கைப்பைகளில் வெடிகுண்டுகள் இருந்துள்ளது.

முதலில் மூன்று பேர்களில் இருவர் பைகளில் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். இன்னொருவன் பயந்து போய் குண்டை இயக்கி, வெடிக்க வைக்காமல் அங்கிருந்து ஓடியிருக்கக்கூடும் என கூறப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஸவன்டெம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய இரு தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மூன்று இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கும் இடையில் முன்னர் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தற்போது புரூசெல்ஸ் நகர போலீசார் நடத்திவரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY