உலக கிண்ணத்திற்கு பிறகு ஓய்வு பெறுவேன் – அப்ரிடி

0
278

உலகக் கிண்ண போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 22 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. தொடக்க வீரர் குப்தில் 48 பந்தில் 80 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), ரோஸ் டெய்லர் 23 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அப்ரிடி, முகமது இர்பான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 22 ரன்னில் வெற்றி பெற்றது. சர்ஜில்கான் அதிகபட்சமாக 25 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), உமர் அக்மல் 24 ரன்னும் எடுத்தனர். ஆடம் மிலின், சான்ட்னெர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்.

நியூசிலாந்து அணி தொடர்ந்து 3-வது ஆட்டத்தில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தது. இதன்மூலம் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவையும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது.

பாகிஸ்தான் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே இந்தியாவிடம் தோற்று இருந்தது. வங்காளதேசத்தை மட்டுமே வென்று இருந்தது. 3 ஆட்டத்தில் விளையாடி 2 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.

இந்த போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் தலைவர் அப்ரிடி கூறும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் எனது கடைசி ஆட்டம் என்றார். இதன்மூலம் அவர் டி20 உலகக் கிண்ணத்திற்கு பிறகு ஓய்வு பெறுகிறார்.

தோல்விக்கு பிறகு அப்ரிடி முகம் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது. சோகமாகவே காணப்பட்டார். இந்தியாவுடனான தோல்விக்கு பிறகு அவரது தலைவர் பதவி பறிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.

பாதுகாப்பு விவகாரத்தில் தாமதாமாக பாகிஸ்தான் அணி இந்தியா வந்தபோது இந்திய ரசிகர்களின் அன்பை பற்றி அப்ரிடி பெருமையாக தெரிவித்து அந்நாட்டில் சர்ச்சையில் சிக்கினார்.

பாகிஸ்தான் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 25-ந்தேதியும், நியூசிலாந்து அணி வங்காளதேசத்தை 26-ந்தேதியும் சந்திக்கிறது.

LEAVE A REPLY