மியான்மர் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக ஆங் சான் சூகி பொறுப்பேற்கிறார்

0
199

மியான்மர் நாட்டின் ஜனநாயகப் போராளியும் ஆளுங்கட்சித் தலைவருமான ஆங் சான் சூகி, அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்க இருப்பதாக அவரது கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் பொறுப்புகளையும் அதிகாரத்தையும் சூகி பகிர்ந்து கொள்வா‌ர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. சூகி இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் ஆங் சான் சூகி, அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

மியான்மர் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி, வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டவர் அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் மந்திரியாக செயலாற்ற குறிப்பிடும்படியான தடை ஏதுமில்லை என்பதால் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவரான ஆங் சான் சூகிக்கு மியான்மர் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த பதவியை ஏற்றுக்கொள்ளும் ஆளும்கட்சி தலைவரான ஆங் சான் சூகிக்கு மேலும் பல முக்கிய பொறுப்புகளும் வழங்கப்படலாம் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருடன் மேலும் 17 மந்திரிகள் தலைமையிலான புதிய மந்திரிசபையின் பதவி ஏற்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY