மாற்று சிறுநீரக சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்

0
184

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகம் மொத்தத்தையும் துல்லியமாக பார்க்க முடிகிறது. விண்வெளிக்கு விருந்தாளி போலச் சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வசதி உள்ளது. இயற்கையான நுண்ணறிவுடன் ‘செயற்கை’ நுண்ணறிவையும் பயன்படுத்தி அதிபுத்திசாலியான எந்திர மனிதர்களை உருவாக்க முடிகிறது.

இப்படி தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதன் முடித்துக்காட்டியுள்ள பல சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனாலும் உயிர்காக்கும் மருத்துவம் என்று வரும்போது மனிதனால் தீர்க்க முடியாத பல மருத்துவச் சிக்கல்கள் இன்னும் உள்ளன என்பதுதான் நிதர்சனம்.

உதாரணமாக, மனித உடலின் செயலிழந்த ஒரு பாகத்துக்கு மாற்றாக ஒரு பாகம் ரத்த பந்தமில்லாத ஒருவரிடம் இருந்து தானமாக கிடைக்கும்போது அதனை உடனே பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் பொருத்தி செயல்படச் செய்ய இன்றுவரை முடியவில்லை. காரணம், ஒரு மாற்று பாகத்தை உடலுக்குள் பொருத்த வேண்டுமானால் ஒருவருடைய உயிரணுக்களின் மேற்பகுதியில் இருக்கும் சில புரதங்கள் உள்ளிட்ட சிக்கலான பல உயிரியல் பொருத்தங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

ரத்த பந்தமில்லாத இருவரின் உடல் பாகங்களை உடலுக்குள் பொருத்த முயன்றால் ஒருவித மோசமான ஒவ்வாமை ஏற்பட்டு அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் அபாயம் இருக்கிறது.

இந்த நிலையில், சிறுநீரகம் செயலிழந்த ஒருவர், எவரிடமிருந்தும் சிறுநீரகத்தை தானமாகப் பெற்று ஒவ்வாமை சிக்கலில்லாமல் வாழ வழிவகுக்கும் ஒரு அற்புதமான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரி செகேவ் தலைமையிலான ஆய்வாளர்கள் நிகழ்த்தி உள்ளனர். இதன் மூலம் ‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’ எனும் வள்ளுவரின் வாக்கு மெய்ப்பட்டு இருக்கிறது என்றே கூறலாம்.

ஒரு நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பினால் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடி புரதங்கள் புதிதாக பொருத்தப்படும் சிறுநீரகத்தை நிராகரிக்காத வண்ணம் அவற்றை மாற்றி அமைத்து, புதிய பாகத்துக்கு எதிராக உருவாகும் ஒவ்வாமையை இந்த சிகிச்சை தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘டீசென்சிடைசேஷன்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய சிகிச்சை மூலம் பொருத்தமில்லாத ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்ட 22 மருத்துவமனைகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் நோயாளிகளில் 1530 பேர் சுமார் 8 வருடங்களாக உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று கண்டறிந்துள்ளது இந்த ஆய்வு.

தற்போது சுமார் 30 ஆயிரம் டாலர்கள் (அதாவது 20 லட்சம் ரூபாய்) வரை செலவாகும் இந்த சிகிச்சையில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், அமெரிக்காவில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பேர் மாற்று சிறுநீரகத்துக்காக தற்போது காத்திருக்கும் நிலையில் சில நோயாளிகளுக்கு இந்த டீசென்சிடைசேஷன் சிகிச்சை செய்துகொள்வது மட்டுமே உயிர்வாழ ஒரே வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

வாழ்நாள் முழுக்க டயாலிசிஸ் அல்லது ரத்த சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ள சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு யாரோ ஒருவர் மூலம் தானமாகக் கிடைக்கும் சிறுநீரகத்தை பொருத்தி சிரமமில்லாத வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் விலை உயர்ந்த இந்த சிகிச்சையானது கல்லீரல் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட பிற மாற்று உடல் பாகங்களை பொருத்தவும் விரைவில் பயன்படுத்தப்பட இருக்கிறது என்கிறார் ஆய்வாளர் டாரி செகேவ்.

LEAVE A REPLY