(Video) பெல்ஜிய விமான நிலையத்தில் இரு வெடிப்புச் சம்பவங்கள்: பலர் பலி

0
283

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் பலர் பலியானதாக பெல்ஜியம் நாட்டின் பெல்கா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில், மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெல்ஜியம் விமான நிலையத்தின் விமானப் பயணிகளின் காத்திருப்பு பகுதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸின் தகவல் மையம் அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவமும் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பிரஸல்ஸ் விமான நிலையத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. விமான நிலையத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. யாரும் விமான நிலையத்துக்கு வர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு:

விமான நிலையத்தில் நடந்த வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பெல்ஜியம் உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும், பெல்ஜியத்தை சுற்றியுள்ள 4 அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரஸல்ஸ் விமான நிலையத்துக்கு வரும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரஸல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக பிரஸல்ஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தீவிரவாதி கைதுக்கு பழிவாங்கலா?

கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் பிரஸல்ஸில் கைது செய்யப்பட்டார். 26 வயது சலா அப்டெஸ்லாம் கைதுக்கு பழிவாங்கும் நோக்கில் இன்றைய தாக்குதல் நடந்திருக்கலாம் என பெல்ஜியம் உள்நாட்டு அமைச்சர் ஜான் ஜாம்போன் தெரிவித்துள்ளார்.

Belgium airport1

LEAVE A REPLY