கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை ஒபாமா சந்திப்பாரா?

0
163

கியூபா முன்னாள் பிடல் காஸ்ட்ரோவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்க மாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரம் உறுதிபட தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒபாமா கியூபா செல்வார் என்று பல மாதங்களாக கூறப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரண்டு நாட்கள் பயணமாக மார்ச் 20-ம் தேதி கியூபா தலைநகர் ஹவானா செல்வார் என வெள்ளை மாளிகை அறிவித்தது.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் ஒபாமா நேற்று கியூபா வந்தடைந்தார். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவை ஒபாமா சந்தித்துப் பேசுவார் என இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கருத்து கூறிய ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் பென் ரோட்ஸ், ‘இந்த பயணத்தின்போது பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. அதுபோன்றதொரு சந்திப்புக்கு நாங்களும் கேட்டுக் கொள்ளவில்லை, கியூபா அரசுதரப்பிலும் எங்களுக்கு அப்படியொரு கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY