(சப்னி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனையில் இடம்பெற்ற தேசிய மாநாட்டில் எவ்விதமான கலாச்சார சீர்கேடுகளும் இடம்பெறவில்லை. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸீன் மாநாட்டில் “குமரிகளின் குத்தாட்டத்தை அரங்கேற்றி குர்ஆன் ஹதீத் யாப்பை கேவலப்படுத்தியுள்ளதுடன் இஸ்லாத்தில் அதிக பிடிப்புக்கொண்ட பாலமுனை மக்களையும் அசிங்கப்படுத்தியுள்ளனர்.” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், உலமா கட்சியின் தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் அவர்கள் அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு வெளியிட்டார். இது பற்றி அமைச்சர் ஹக்கீமிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி கேட்கும் போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித்தலைவர், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த மாநாடு தேசிய ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்கின்றனது.
இதன் காரணமாகவே இலங்கை உள்ள வேடுவர்கள் அவர்களின் கலாச்சாரத்தை அரங்கேற்ற கலை நிகழ்சிகளும் மற்றும் ஏனைய கலை, கலாச்சார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களையும் மதித்து செயற்பட்டோம்.
ஆனால், இதனைக்கூட சரியாக விளங்காமல் பலர் எங்களை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் எவ்வகையான பிழையும் இல்லை எனவும், மற்றைய மதத்தவர்களை மதித்து செயற்படுகின்றோம் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.