“யோகேஸ்வரனின் இனவாத கருத்துக்கள் மிகுந்த அதிர்ச்சியினையும் ஏமாற்றத்தினையும் அளிக்கின்றன” ஐயூப் அஸ்மின்

0
212

“பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தெட்டத்தெளிவான இனவாத கருத்துக்களாகும். இது மிகுந்த அதிர்ச்சியினையும் ஏமாற்றத்தினையும் எமக்களிக்கின்ற அதேவேளை இதனை வன்மையாக நாம் கண்டிக்கின்றோம்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்(NFGG) வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

வாகரை இறாலோடை வள்ளுவர் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய அய்யூப் அஸ்மின் தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கல்குடா தொகுதியிலே தமிழ் மக்களுக்கு எதிராக இஸ்லாமியர் ஒருவருக்கு தமிழ் மக்கள் அதிகமாக வாக்களித்திருப்பதை வாக்கு எண்ணும் நிலையத்தில் தான் கண்டுகொண்டதாகவும் அந்த வாக்குகளை தமிழர்களின் சின்னமாகிய வீட்டுக்கு அளிக்காவிட்டாலும், ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்ற தமிழர்களுக்கு அளித்திருக்கலாம் என்றும், ஆனால் தமிழர்கள் இஸ்லாமியரான ஒருவருக்கு வாக்களித்திருப்பது வேதனை தருகின்றது என்றும் யோகேஸ்வரன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். மேற்படி கருத்துக்களை வீடியோ வடிவத்தில் செவியுறும் சந்தர்ப்பமும் எனக்குக் கிட்டியது.

அவரது கருத்துக்களில் முற்றுமுழுதான இனவாதம் இழையோடிருப்பதை நான் செவியுற்று அதிர்ச்சியடைந்தேன். மட்டக்களப்பு மாவட்டத்திலே எவராது ஒரு முஸ்லிம் அரசியல் வாதி சமூக விரோதமாக செயற்படுகிறார் என்றால் அதனை ஆதாரபூர்வாமன முன்வைத்து ‘அவருக்கு தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களும் வாக்களித்தமை தவறான செயல்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருப்பின் அது அவரது இனவாத்திற்கு எதிரான சமூகநீதிக்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும். மாற்றமாக ‘முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் தமிழ் மக்களும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமியர்களுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்கின்ற அர்த்தத்தோடு அவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

அத்தோடு மட்டக்களப்பு முஸ்லிம்கள் தமக்கு அவசியாமான ஒரு நிர்வாக கட்டமைப்பாக மத்திய கல்வி வலயத்தை பெற்றுக் கொண்டமையினையும் ஒரு இனவாதக் கண்ணோட்டத்தோடே யோகேஸ்வரன் அவர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பதும் புலனாகிறது.

அவர் சார்ந்திருக்கும் கட்சியான தமிழரசுக் கட்சி தனது யாப்பில் முஸ்லிம்களுக்கான சுயநிர்ணய அலகு ஒன்று பற்றியே குறிப்பிட்டிருக்கும் நிலையில், அவர் முஸ்லிம்களுக்கான ஒரு கல்வி நிர்வாகத்தினைக் கூட ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இல்லை என்பது பெரும் ஆச்சர்யமாகவும், கவலையாகவும் இருக்கிறது. இந்தக் கருத்துக்களை ஒரு சாதாரண ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இவ்வாறான கருத்துக்கள் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம்மக்களை நிரந்தரமாக எதிரிகளாக வைத்திருப்பதற்கான அடிப்படைகளைத் தோற்றுவிக்குமே தவிர இரண்டு சமூகங்களுக்குமிடையில் நல்லிணக்கத்தையோ ஐக்கியத்தையோ ஏற்படுத்த ஒருபோதும் வழி சமைக்காது.

தமிழ் முஸ்லிம் உறவில் குறிப்பாக ஆயுதப்போராட்டம் உருவெடுத்த காலம் முதல் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்ற கசப்பான அனுபவங்களை சிறுகச்சிறுக மாற்றியமைத்து, இரண்டு சமூகத்தவருக்கும் இடையில் நம்பிக்கையினை கட்டியெழுப்பி ஒரு பலமான ஐக்கியப்பட்ட மக்களாக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் நிலைநிறுத்த வேண்டியஒரு தீர்க்கமான சந்தர்ப்பத்தில் இரண்டு சமூகங்களினது பிரதிநிதிகள் இதுவிடயத்தில் மிகுந்த முன்மாதரியோடு செயற்படவேண்டியது அவசியமாகும்.

சமகாலத்தில் தமிழ் மக்களுடனான அரசியல் உறவில் முஸ்லிம் மக்கள் கூடுதல் தயக்கம் காட்டி வருகின்றார்கள். இதனை ஊக்கப்படுத்துகின்ற ஒன்றாகவே பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து எடுத்துக் கொள்ளப்படுமேயன்றி அது தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒன்றாக ஒருபோதும் அமையாது.

தமிழ் மக்களுடனான அரசியல் உறவில் முஸ்லிம் மக்கள் அதீத தயக்கம் காட்டும் சந்தர்ப்பத்திலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு வடக்கு மாகாணத்திலே ஒரு புரிந்துணர்வு உடன்பாட்டின் அடிப்படையில் இணக்கப்பாட்டு அரசியலை முன்கொண்டு செல்கின்றது ந.தே.மு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளும் இரண்டு சமூகங்களுக்குமிடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தி வரும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்படி கருத்துக்கள் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலைகளையே ஏற்படுத்தும்.

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களது இவ்வாறான இனரீதியான பாகுபாட்டினை தோற்றுவிக்கும் கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கௌரவ.இரா.சம்பந்தன் (பா.உ) அவர்களது கவனத்திற்கும் த.தே.கூ வின் ஏனைய அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளோம்”

(ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

LEAVE A REPLY