அமிர்தலிங்கத்தின் சேவை அளப்பரியது: பொன் செல்வராசா

0
138

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழரசுக்கட்சியின் வரலாற்றில் மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். அதனால்தான் அவர் மட்டக்களப்பு மண்ணில் தேர்தலில் போட்டியிட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கே. துரைராஜசிங்கம் தலைமையில் திங்களன்று நடைபெற்ற மங்கையற்கரசியாரின் நினைவு நிகழ்வில் மங்கையற்கரசியாரின் உருவப்படத்திக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகள் நடைபெற்றன.

இந்த அஞ்சலி கூட்டத்திற்கு பெருமளவான தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா, அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும்பங்கினை மங்கையற்கரசி அம்மா ஆற்றியுள்ளார்.

அமிர்தலிங்கம் ஐயாவின் மறைவுக்கு பின்னர் துரதிர்ஸ்டவசமாக மங்கையற்கரசி அம்மாவின் சேவையினை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொள்ளவுமில்லை, தமிழரசுக்கட்சி அவர்களை நினைவுகூரவும் இல்லை. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராகஇருந்து தமிழரசுக்கட்சியை வளர்த்தவர், கணவன் மனைவியாக இருந்து சேவையாற்றியவர்கள். அவர்களின் நினைவு தினத்தினையாவது யுத்தத்திற்கு பின்னர் நினைவுகூர வேண்டும் என நாங்கள் முயற்சிக்கவில்லை.

இங்கு நாங்கள் மங்கையற்கரசி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தும்போது மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் ஐயாவினையும் தொட்டு நிற்கின்றோம்.

நாங்களும் சில தவறுகளை செய்துகொண்டே உள்ளோம். ஒருவர் மறைந்த பின்னர் அவர் தொடர்பில் பேசுகின்றோம். அவர் புகழ்பாடுகின்றோம். ஆனால் ஒருவர் உயிருடன் உள்ளபோது அவரது சேவையினை நாங்கள் சமூகத்திற்கு எடுத்துக் கூறவேண்டும். அவ்வாறு இருக்கும்போதே உண்மையான நடவடிக்கையினை நாங்கள் முன்னெடுத்துச் செல்பவர்களாக அமைவோம். ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவர்கள் ஆற்றிய பணிகளை நினைவுகூர வேண்டும்.

மங்கையற்கரசி அம்மையார் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழரசுக்கட்சிக்காவும் அவரது கணவருக்கு துணையாக நின்று பெரும்பங்காற்றியுள்ளார். இது மிகவும் பெறுமதியானது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன். ஞா. சிறிநேசன். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY