நீதிமன்றம் செல்லும் முஸ்லிம் காங்கிரஸ் உள் வீட்டுப்பிரச்சினை: ஜுனைட் நளீமி

0
303

நடந்து முடிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டின் பின்னர் பல்வேறு ஏற்புக்களும், எதிர்ப்புக்களும் விமர்சனமாக முன்வைக்கப்பட்டுள்ளன. இம்மாநாடு கட்சி மட்டத்திலும், முஸ்லிம் சமூகமட்டத்திலும் முக்கிய வரலாற்று திருப்பமாக எதிர் பார்க்கப்பட்டது. இருந்த போதும் கட்சித்தலைமைத்துவத்தின் ஆழுமை,கட்சியின் எதிர்காலம், முஸ்லிம் சமூகம் குறித்த தமிழ்த்தரப்பின் நிலைப்பாடு என பல்வேறு கோணத்தில் எதிர்வினைகள் பேசுபொருளாகி விட்டுள்ளன.

பிரபாகரனின் மாவீரர் உரை போன்று எதிர் பார்ப்பு மிக்க நாளாகத்தான் முஸ்லிம் காங்கிரஸின் மாநாடு கடந்த காலங்களில் போராளிகளால் எதிர்பார்க்கப்பட்டுவந்துள்ளது. இம்முறையும் அரசியல் தீர்வு குறித்த யோசனையில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்தே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு போராளிகள் மன்றில் அங்கீகாரம் பெறப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கலையெடுப்புக்கான களமாகவே அது பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் இருப்பே இன்று தீர்வுத்திட்டத்தினை விட முக்கியத்துவம் வாய்ந்தது என தலைவர் கருதுவதிலும் ஒரு நியாயப்பாடு சொல்லப்படுகின்றது.

எதிர் பார்த்தது போன்று தலைமையினை தலையிடிக்குற்படுத்திவரும் தவிசாளர்,செயலாளர் நாயம் ஆகியவர்களை போராளிகள் மன்றில் நிறுத்தி தீர்ப்பு சொல்வதற்கான நீதிமன்றமாக மாநாட்டு மண்டபம் பயன் படுத்தப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

தலைமையின் அதிரடி நடவடிக்கை
கட்சியில் செயலாளர் நாயகத்திடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்படவேண்டும், தீர்மானம் எட்டும் விடயத்தில் தலைமையின் அதிகாரம் மட்டுப்படுத்தவேண்டும். என்ற கோசங்களை முன் வைத்துபோராட்டங்கள் கட்சிக்குள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கான கையெழுத்து வேட்டைகளும் உயர்பீட உறுப்பினர்களிடம் பெறப்பட்டு தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதன் விபரீதம் அறிந்த தலைமை விழித்துக்கொண்டு செயற்பட்டதினை கட்சியின் ஆரம்பகால போராளியும் உயர்பீடஉறுப்பினருமான இல்யாஸ் மௌலவி அவர்களுக்கெதிரான இடைநிறுத்தல் கடிதத்தோடு ஆரம்பித்தது.

மற்றைய நபராக கட்சியின் ஷூறா சபைத்தலைவர் கலீல் மௌலவிஅவர்களின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இத்தகைய கயிறிழுப்புக்கு மத்தியில் தலைவரை அவமானப்படுத்தும் வகையில் மாநாட்டை செயலாளர் நாயகம் பகிஷ்கரிப்பு செய்தமை பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

கட்சியை இக்கட்டான நிலைக்குத்தள்ளியவர்கள்,காட்டிக் கொடுப்பு செய்தவர்கள் அனைவரும் விரைவில் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகுவார்கள் என்ற செய்தி தவிசாளர் தலைமையிலான மாற்று அணியினரின் செயற்பாட்டினை தீவிரப்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக மௌலவி இல்யாஸ் சட்டரீதியாக எதனையும் அணுக தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் உள்ள முரண்பாடுகளை பேசித்தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை காலதாமதம் படுத்துவது பாரிய பிளவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோன்று செயலாளர் நாயகம் எந்த சட்டத்தின் மூலமும் தன்னை கட்சியிலிருந்து நீக்கமுடியாது என ஊடக அறிக்கை விடுத்திருப்பதும் நிலைமையினை தீவிரமாக நோக்கவைத்துள்ளது.

பொல் கொல்லை பேராளர் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்சியின் யாப்பு வேறு தேர்தல் ஆணையாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்ட யாப்பு வேறு என்ற குற்றச்சாட்டினை மாற்றுத்தரப்பு முன்வைப்பதுடன் முன்பிருந்த அனைத்து அதிகாரங்களையும் செயலாளர் நாயகத்திற்கு வழங்கவேண்டும் என மாற்றனியினர் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். எதுஎவ்வாறிருந்தபோதும் குறித்த விடயம் நீதிமன்றவரை செல்வதற்கான வாய்ப்பினையே அதிகம் அவதானிக்க முடிகின்றது.

தீர்வுத்திட்டம் குறித்து தமிழ்த்தரப்பினை நம்பமுடியாது
நடந்து முடிந்த மாநாட்டில் சம்பந்தன் ஐயா அவர்களாவது தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களது நிலைப்பாடு குறித்து தனது சமூகம் சார்ந்த ஆக்க பூர்வமான கருத்தினை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்தகால யுத்தத்தில் தமிழர்கள் மாத்திரமே இழப்புக்களை எதிர்கொண்ட சமூகம் என்ற வரலாற்றுத்திரிபினை யுத்தத்திலும் யுத்திற்குப்பின்னரும் இழப்புக்களை சந்தித்துள்ள முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மேடையேறி முழுப்பூசனிக்காயையும் சோற்றில் மறைத்து விட்டுசென்றமை வேதனையளிக்கின்றது.

சிறுபான்மைக்கான உரிமைப்போராட்டத்தில் தந்தை செல்வாவின் அரசியல் போராட்டத்தில் பயணித்த மசூர் மௌலானா உள்ளிட்ட பல முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இதய சுத்தியான போராட்டத்தை அவர்கள் வாழ்ந்து மறைந்த பூமியிலே ஈமைக்கிரியை செய்துவிட்டு சென்றமை சம்பந்தன் ஐயாவின் வரலாற்று துரோகமாகும்.

விடுதலைப்போராட்டத்தில் முஸ்லிம் இளைஞசர்கள் ஆயுதம் கொண்டு பயனித்தமையும், தங்களை மாவீரர்களாக விதைத்துக்கொண்டமையும் சம்பந்தன் ஐயாவுக்கு தெரியாமலும் இல்லை. மேடையிலேயே முழுப்பூசனிக்காயாய் வீற்றிருந்த முன்னாள் ஈரோஸ் போராளியும் கட்சியின் தவிசாளருமான வரை வைத்துக்கொண்டே வரலாற்று திரிபினை சம்பந்தன் ஏற்படுத்தி இருந்தமையும், குறைந்தது தலைவர் பின்னைய தனது உறையில் சம்பந்தன் ஐயாவுக்கான ஒரு பதிலையாவது விட்டிருந்தால் வரலாற்றுப்பதிவாக அமைந்திருக்கும்.

தலைவருக்கிருந்த தலையிடிகள் வார்த்தைகளானது
கடந்த காலங்களில் கட்சியின் மீதான பல்வேறுவிமர்சனங்களுக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களின் நடவடிக்கைகள் காரணமாக அமைந்திருந்தமையை மறுக்கமுடியாது. காலத்தின் மீட்சி இன்று தலைவரை தீர்மான சக்தியாக மாற்றியுள்ளது.

இதன் அடிப்படை கட்சியின் யாப்பு உருவாக்கத்திலிருந்தே தோற்றம் பெற்றது. மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கும் சேஹு இஸ்ஸதீன் அவர்களுக்கும் இடையிலான முறுகல் தொடக்கம் தற்போதைய செயலாளர் நாயகம் வரை நீண்டு செல்லும் பல்வேறு பிளவுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் கட்சியின் யாப்பு சர்வதிகாரத்தினை சிலர் கையில் குவிக்க முனைந்ததே அடிப்படையாக அமைந்துள்ளது.

கட்சியின் வளர்ச்சிப்பாதையில் கட்சித்தலைமைக்கும் அடிமட்டபோராளிகளுக்கும் இடையேயான உறவுகள் திட்டமிடப்படாத கட்சி செயற்பாட்டினால் இடை வெளியாகியுள்ளது. கட்சியின் செய்திகளும் நடவடிக்கைகளும் உடனுக்குடன் அடிமட்ட போராளிகள் மன்றில் கருத்தாடலுக்கு விடப்பட்டாமையும் சிற்றரசர்களது தன்னாதிக்கத்துக்குள் போராளிகளை பிழையாக வழிநடாத்த வழி வகை செய்தது.

தேர்தல்கள் வரும்போதே கட்சி கீதமும் கையூட்டுக்கலும்,மாநாடுகள் வருகின்ற போதே சாப்பாட்டு பார்சல்களும், பிரயாண ஒழுங்குகளும் என்ற மரபு சார்ந்த அரசியலில் இருந்து முஸ்லிம் காகிரஸ் விடுபட வேண்டிய தேவையை இந்நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.

இத்தகைய இடைவெளியே கட்சியில் முறுகல் நிலை ஏற்படும் போதெல்லாம் சமரச முயற்சிகளுக்கு உரிய தரப்பினரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போனதற்கு காரணமாகும்.

நடந்து முடிந்த மாநாட்டில் தலைவர் தனது ஆதங்கங்களை ஆளுமையாக வெளிப்படுத்திய போதும் தேசியத்தலைமை சிலவார்த்தைப் பிரயோகங்கலிலிருந்து தவிர்ந்திருப்பதும்,சில தனிநபர் விமர்சனங்களை இங்கிதமாக தவிர்ந்திருப்பதும் சாணக்கிய தலைமைக்கு சான்றாக அமைந்திருக்கும்.

இலங்கை இனப்பிரச்சினைகுறித்த இக்கட்டான சூழ்னிலையில் முஸ்லிம் சமூகம் உள்ள நிலையில் பிரச்சிணைகளை ஊதிப்பெருப்பிக்கும் செயல்பாடு சிறந்ததாக அமையாது. தமிழ்த்தரப்போடு இனக்கப்பாட்டு அரசியல் மேற்கொள்ளமுடியுமாக இருந்தால் கட்சிக்குள்ளும்,கட்சிக்குவெளியே உள்ள ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகள்,தலைமைகளுடனும் நல்லிணக்க செயற்பாட்டுஅரசியலை முன்வைக்க வேண்டிய தேவை முஸ்லிம் காங்கிரஸூக்கு இருக்கின்றது.

மன்னிப்பதற்கும் மறப்பதற்கும் இயலாது என்றுசொல்லுமளவு ஒன்றும் தூய்மைவாத அரசியல் இடம்பெறவில்லை என்பது ஏற்றுக்கொண்ட விடயம். எவ்வாறு முஸ்லிம் கட்சியின் மாநாட்டு மேடையில் அந்நிய கலாச்சார கலை நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருந்தால் நன்றாக அமைந்திருக்குமோ அவ்வாறே சில தவிர்ப்புக்களை நடந்து முடிந்த மாநாடும் வேண்டிநிற்கின்றது.

கடந்தகால பிழையான தீர்மானங்களுக்கு வெருமனே ஒரு சிலரை மாத்திரம் குற்றம் சொல்வதனைவிட தலைமையும் பொறுப்பேற்க வேண்டிய நிலைமையையும் மறுப்பதற்கில்லை. எனவே கட்சியின் விரிசல் மற்றுமொரு சமூக பின்னிலைக்கு வழிவகுப்பதாக எதிர்காலத்தில் அமையக்கூடாது என்பதனை புத்திஜீவிகள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY