இனத் துவேசிகளையெல்லாம் ஐக்கியத்தை விரும்பும் மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்: எம்.எஸ்.எஸ். அமீர் அலி

0
251

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இனத் துவேசிகளையெல்லாம் ஐக்கியத்தை விரும்பும் மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் அமீர் அலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அங்கு கல்வி அதிகாரிகள், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய அவர்,
வரலாறு தெரியாத அரசியல்வாதிகள், பிரதேசத்தைப் பற்றித் தெரியாதவர்கள், முஸ்லிம்களையும் தமிழர்களையும் வேற்றுமைப்படுத்தி எந்நேரமும் துவேசத்தனமாக அரசியல் மயப்படுத்தும் யோகேஸ்வரன் போன்றவர்கள் கடந்த 30 வருட கால இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தற்போது நிம்மதியை மட்டும் வேண்டி நின்று இன ஐக்கியத்தை விரும்புகின்ற தமிழ் மக்களால் எதிர்காலத்திலே தோற்கடிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

ஏனென்றால், வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது மறத் தமிழனாக இருக்கட்டும் என்று கடந்த காலங்களிலே இனத்துவேசம் பேசித்திரிந்த அரசியல் துவேசிகளையெல்லாம் இன ஐக்கியத்தை விரும்பும் தமிழ் மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.

அவர்கள் இப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக போக்கிடமின்றி மௌனித்துப் போய் இருக்கின்றார்கள்.

இந்த வரலாறு தெரியாமல் தற்போது கிராமம் கிராமமாகத் துவேசம் பேசித் திரியும் யோகேஸ்வரனுக்கும் எதிர்காலத்தில் இந்தக் கதிதான் வரும்.

மக்கள் அவரை நிராகரிக்கும் போது அவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக கைசேதப்பட வேண்டி வரும்.
இந்தப் பிரதேசத்திலே தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியால், கல்வியால், பொருளாதாரத்தால், நிருவாகத்தால், தொழில்களால், சேவைகளால், கலாசார பண்பாடுகளால், தேவைகளால் ஏனைய வாழ்வியல் அம்சங்களால் ஒருவரிலிருந்து மற்றவர் ஒருபோதும் பிரிந்து வாழ முடியாது என்கின்ற யதார்த்தம் தெரியாமல்இன்னமும் இனத் துவேசத்தை உளறித் திரிகின்ற யோகேஸ்வரன் போன்றவர்களின் எதிர்காலம் சூனியமாகவே அமைந்து விடும்.
இந்த நல்லாட்சியின் பங்காளிகள் என்று கொக்கரித்து கொழும்பு சிங்களத்திற்கு ஒரு நாடகமும் வடக்கு கிழக்கு அப்பாவித் தமிழ் மக்களுக்கு இன்னொரு நாடகமும் போடும் உங்களால் ஏன் இன்னமும் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க முடியவில்லை ?

போர்க் காலத்தின்போது வடக்கு கிழக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழ்ப் பொது மக்களின் நிலங்களை ஏன் உங்களால் முழுமையாக விடுவிக்க முடியவில்லை.?

பெருமையடிக்கின்ற நீங்கள் ஒரு மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவிக்காக தலைநகர் கொழும்பிலே நாயாய் அலைந்து திரிவது கௌரவமிக்க தமிழ் சமூகத்திற்கே அவமானம் விளைவிப்பதாய் உள்ளது.

தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் உங்களைப் போன்றவர்கள் இனிமேலாவது இந்த அப்பாவித் தமிழ் மக்களை தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வழிவிடுங்கள். சொந்த சமூகத்தின் பிரச்சினைகளையே அரசியல் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் நீங்கள் தமிழ் மக்களோடு பின்னிப் பிணைந்து வாழும் அடுத்த சமூகமான முஸ்லிம்களின் கல்வி, காணி, நிருவாகப் பிரச்சினைகளைப் பற்றி எப்படிப் பேசப்போகின்றீர்கள். சமூக ஐக்கியத்திற்காக உங்களால் உதவ முடியாவிட்டாலும் உபத்தரவமாவது செய்யாமலிருங்கள். சொந்த சமூகமும் அடுத்த சமூகமும் உங்களைத் தூற்றாமலிருக்க வழி தேடுங்கள்.

LEAVE A REPLY