அவுஸ்ரேலியாவை வென்றது நியூசிலாந்து

0
169

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வென்றது.

தரம்சாலாவில் இன்று நடைபெற்ற சூப்பர் 10 குரூப்-2 லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் குப்தில் (29), கேப்டன் வில்லியம்சன் (24) ஆகியோர் நல்ல துவக்கம் அளித்தபோதும் மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவு ரன் குவிக்கவில்லை. இதனால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

கொலின் முன்றோ 23 ரன்களும், எலியாட் 27 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் பால்க்னர், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர்கள் கவாஜா, வாட்சன் இருவரும் இணைந்து 44 ரன்கள் எடுத்தனர். வாட்சன் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக ஆடிய கவாஜா 38 ரன்களில் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு இணைந்த மேக்ஸ்வெல்- மார்ஷ் ஜோடி ரன்ரேட்டை உயர்த்த போராடியது. அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் மெக்ளெனகன் மிகவும் சிக்கனமாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY